Last Updated : 01 Nov, 2015 09:51 AM

 

Published : 01 Nov 2015 09:51 AM
Last Updated : 01 Nov 2015 09:51 AM

விரும்பிய உணவை உண்ணும் உரிமை நாட்டு மக்களுக்கு உள்ளது: கர்நாடக முதல்வர் சித்தராமையா கருத்து

“விரும்பிய உணவை உண்ணும் உரிமை நாட்டு மக்களுக்கு உள்ளது. சாதி, மதத்தின் பெயரில் தனி மனித உரிமையை பறிப்பதை வேடிக்கை பார்க்க முடியாது” என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறினார்.

கர்நாடக மாநில இளைஞர் காங்கிரஸ் மாநாடு பெங்களூருவில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற சித்தராமையா பேசும் போது, “மத்தியில் ஆளும் பாஜக மற்றும் அதன் கூட்டணி அமைப்பு களான பஜ்ரங் தளம், சிவசேனா உள்ளிட்டவை மாட்டிறைச்சி உண்பதை பெரும் பிரச்சினையாக்கி வருகின்றன. இதனை ஜனநாயக சக்திகள் அனைத்தும் வன்மையாக கண்டிக்க வேண்டும்.

நாட்டு மக்களுக்கு தங்களுக்கு விருப்பமான உணவை உண்ணும் உரிமை இருக்கிறது. சாதி, மதத்தின் பெயரில் தனி மனித உரிமையை பறிப்பதை வேடிக்கை பார்க்க முடியாது. நான் இதுவரை மாட்டிறைச்சி சாப்பிட்டதில்லை. எனக்கு விருப்பம் இருந்தால் நான் மாட்டிறைச்சி சாப்பிடுவதை யாராலும் தடுக்க முடியாது. மாட்டிறைச்சி சாப்பிட்டதாக சந்தேகப்பட்டு தாத்ரியில் இஸ் லாமிய முதியவரை கொன்றதை யாராலும் மன்னிக்க முடியாது. இத்தகைய மனித தன்மையற்ற செயல்களில் ஈடுபடுவோரை மக்கள் புறக்கணிக்க வேண் டும்''என்றார்.

தாத்ரி படுகொலையை தொடர்ந்து மாட்டிறைச்சி விவகாரம் மிகப்பெரும் சர்ச்சையாக உருவெடுத்து வரும் நிலையில் சித்தராமையா இவ்வாறு கூறியுள்ளார். சித்தராமையாவின் பேச்சுக்கு இந்துத்துவா அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஸ்ரீராம் சேனா அமைப்பின் பிரமோத் முத்தாலிக் கூறும்போது, “கர்நாடகாவில் 5 கோடிக்கும் அதிகமான இந்துக்கள் வாழ்கிறார்கள். இந்துக்களின் ஓட்டுகளைப் பெற்று முதல்வராக பதவி வகிக்கும் சித்தராமையா நன்றி உணர்வின்றி பேசுகிறார். நாடு முழுவதும் வாழும் நூறு கோடி மக்களின் நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் செயலில் சித்தராமையா ஈடுபட்டால் பொறுத்துக்கொள்ள முடியாது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x