

அணு மின் உற்பத்தி நிலையத்தில் விபத்து நேரிட்டால், அதற்கு உதிரிபாகம் வழங்குபவர்கள் பொறுப்பாக்கப்பட மாட்டார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
எனினும், அணு உலைகளை நிர்மாணிக்கும் நிறுவனங்கள் உட்பட முக்கிய பாகங்களை வழங்குபவர்கள் இதிலிருந்து தப்பிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது.
டெல்லியில் இன்று நடைபெற்ற 7-வது அணு சக்தி மாநாட்டில் பங்கேற்ற அணு சக்தித் துறை செயலாளரும் அணு சக்தி ஆணைய தலைவருமான சேகர் பாசு கூறியதாவது:
அணு மின் நிலையங்களுக்கு உதிரிபாகம் வழங்கும் நிறுவனங்கள் உள்நாட்டைச் சேர்ந்ததாக இருந்தாலும் வெளிநாடுகளைச் சேர்ந்ததாக இருந்தாலும், விபத்து நேரிட்டால் அதற்கு அவர்கள் பொறுப்பாக்கப்பட மாட்டார்கள். இது ஒப்பந்தத்திலேயே குறிப்பிடப்படும்.
எனினும், அணு உலைகளை வடிவமைக்கும், நிர்மாணிக்கும் நிறுவனங்கள் உட்பட முக்கிய பாகங்களை வழங்குபவர்கள் விபத்துக்கு பொறுப்பேற்க வேண்டும். இதிலிருந்து அவர்கள் தப்பிக்க முடியாது.
அணு உலைகளை நிர்மாணிக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் ரூ.1,500 கோடிக்கு காப்பீடு செய்ய வேண்டும். மேலும் அதே தொகைக்கு இந்திய அணு மின் கழகமும் (என்பிசிஐஎல்) காப்பீடு செய்யும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அரசின் இந்த முடிவு உதிரி பாகம் வழங்கும் உள்நாட்டு நிறுவனங்களுக்கு நிம்மதி அளிப்பதாக அமைந்துள்ளது. அணு மின் நிலையத்தில் விபத்து ஏற்பட்டால், உதிரி பாகங்களை வழங்குபவர்களையும் பொறுப்பாக்க வேண்டும் என அணு உலை சேத பொறுப்புடைமை சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த நிபந்தனை மிகவும் கடுமையாக இருப்பதாக உதிரி பாகம் வழங்குபவர்கள் அரசிடம் புகார் கூறியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.