கருப்பு பண விவகாரம்: காங். மூத்த தலைவர் பிரனீத் கவுர் வங்கிக் கணக்குகள் குறித்து விசாரணை

கருப்பு பண விவகாரம்: காங். மூத்த தலைவர் பிரனீத் கவுர் வங்கிக் கணக்குகள் குறித்து விசாரணை
Updated on
2 min read

காங்கிரஸ் மூத்த தலைவர் பிரனீத் கவுரின் சுவிட்சர்லாந்து வங்கி கணக்குகளின் விவரங்களை அளிக்குமாறு அந்த நாட்டு அரசிடம் இந்தியா உதவி கோரியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் எச்.எஸ்.பி.சி. வங்கியில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள 628 இந்தியர்கள் குறித்த பட்டியலை சில ஆண்டுகளுக்கு முன்பு பிரான்ஸ் அரசு இந்தியாவிடம் அளித்தது. அந்தப் பட்டியல் கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து சுவிட்சர்லாந்தில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக 1195 பேரின் பெயர் விவரங்களை ஆங்கில நாளிதழ் ஒன்று கடந்த ஜூனில் வெளியிட்டது. இதில் காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான பிரனீத் கவுர், அவரது மகன் ரணீந்தர் சிங் ஆகியோரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

இதனிடையே கருப்பு பணத்தை கட்டுப்படுத்த சில மாதங்களுக்கு முன்பு சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தை (பிஎம்எல்ஏ) மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த சட்டத்தின்படி வெளிநாடுகளில் கருப்பு பணம், சொத்துகளை பதுக்கி வைத்திருப்பவர்கள் தாமாக முன்வந்து தகவல் அளிக்க கடந்த செப்டம்பர் 30 வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டது. இதில் 638 பேர் தாங்களாக முன்வந்து ரூ.3770 கோடி அளவிலான கருப்பு பணம், சொத்து விவரங்களை தெரிவித்தனர்.

ஆனால் பிரனீத் கவுரும் அவரது மகன் ரணீந்தர் சிங்கும் எவ்வித தகவலையும் தெரிவிக்கவில்லை. இதைத் தொடர்ந்து அவர்களின் வங்கிக் கணக்குகளின் விவரங்களை அளிக்குமாறு சுவிட்சர்லாந்து அரசிடம் இந்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்தத் தகவலை சுவிட்சர்லாந்தின் வரி நிர்வாக அமைப்பு தெரிவித்தது. பிரனீத் கவுர், ரணீந்தர் சிங் ஆகியோரின் குடியுரிமை மற்றும் பிறந்த தேதி விவரங்களை அந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. வேறு எந்த தகவல்களையும் வெளியிடவில்லை.

இதுதொடர்பாக பிரனீத் கவுரும் ரணீந்தர் சிங்கும் 10 நாட்களுக்குள் சுவிட்சர்லாந்து அரசிடம் மேல்முறையீடு செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் கருப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்கள் குறித்த தகவல்களை அளிக்கக் கோரி இந்திய அரசு சார்பில் பல்வேறு விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதில் இதுவரை 12 பேரின் விவரங்களை மட்டுமே சுவிட்சர்லாந்து அரசு வெளியிட்டுள்ளது. ஏராளமான கோரிக்கைகள் இன்னமும் நிலுவையில் உள்ளன.

பெரும்பாலும் கருப்பு பணம் குறித்த விவரங்களை சுவிட்சர்லாந்து அரசு வெளியிடுவதில்லை. ஆனால் அமெரிக்கா உட்பட சர்வதேச நாடுகளின் நெருக்கடி காரணமாக தற்போது வெளிநாட்டினரின் வங்கிக் கணக்கு விவரங்களை வெளியிட ஒப்புக் கொண்டுள்ளது.

அந்த நாட்டு சட்டப்படி குறிப்பிட்ட நபரின் கருப்பு பண விவரங்களை கோர முதலில் சுவிட்சர்லாந்து அரசின் வரி நிர்வாக அமைப்பிடம் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அந்த நாட்டு நீதிமன்றத்தில் முறைப்படி மனு தாக்கல் செய்ய வேண்டும். நீதிமன்றங்களில் போதிய ஆதாரங்களை அளித்தால் குறிப்பிட்ட நபரின் வங்கிக் கணக்கு விவரங்கள் அளிக்கப்படும்.

தற்போது இந்திய அரசிடம் உள்ள தகவல்கள் பிரான்ஸ் நாட்டிடம் இருந்து பெறப்பட்டவை. அவை எச்.எஸ்.பி.சி. முன்னாள் ஊழியர் ஒருவர் அந்த வIங்கியில் இருந்து திருடிய தகவல்கள் ஆகும். எனவே அதை சுவிட்சர்லாந்து அரசு ஆதாரமாக ஏற்க மறுத்து வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in