

மத்திய அரசு அறிவித்த ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் திட்டத்தில் உள்ள குறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் முன்னாள் ராணுவ வீரர்கள் இரண்டு பேர் தங்களது பதக்கங்களை எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ராணுவத்தில் ஓய்வு பெற்ற முன்னாள் வீரர்கள் மற்றும் அதிகாரிகள் ஒரே பதவி ஒரே ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கோரி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அவர்களது கோரிக்கையை ஏற்கும் விதமாக, இந்த திட்டம் தொடர்பான அறிவிக்கையை மத்திய அரசு கடந்த சனிக்கிழமை வெளியிட்டது. அப்போது கருத்து தெரிவித்திருந்த பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கர், ‘‘ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் தொடர்பான அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற இயலாது. எனினும் ஒரே பதவிக்கு ஒரே ஓய்வூதியம் என்ற முக்கிய கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது’’ என்றார்.
இதனால் அதிருப்தி அடைந்த முன்னாள் ராணுவத்தினர், தங்களது அனைத்து கோரிக்கைகளையும் மத்திய அரசு நிறைவேற்ற வலியுறுத்தி, விருதுகளை திருப்பி அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர். இந்நிலையில், டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் அமர்ந்து முன்னாள் ராணுவ வீரர்கள் நேற்று உண்ணாவிரதம் மேற்கொண்டனர். அப்போது அதில் பங்கேற்ற இரு ராணுவ வீரர்கள் திடீரென மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியவாறு, தங்களிடம் இருந்த பதக்கங்களை எரிக்க முயன்றனர். இதனால் உடனிருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து அவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் போராட்டத்தை முன்னின்று நடத்தும் மேஜர் ஜெனரல் சத்பிர் சிங்கும், பதக்கங்களை எரிக்க வேண்டாம் என, கேட்டுக்கொண்டார். இதையடுத்து பதக்கங்களை எரிக்கும் போராட்டத்தை அவர்கள் கைவிட்டனர். எனினும், இந்த சம்பவத்தால் அப்பகுதியில் லேசான பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, 50க்கும் மேற்பட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி குடியரசு தலைவர் மாளிகைக்கு பேரணியாக செல்ல முயன்றனர். ஆனால், அவர்களை ரயில்வே அமைச்சகம் முன், டெல்லி போலீஸார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.
டெல்லி, ஹரியாணா மற்றும் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்கள் சிலர் சமீபத்தில் தங்களது விருதுகளையும், பதக்கங்களை யும் மத்திய அரசிடம் திரும்ப ஒப்படைத்ததை அடுத்து, முன்னாள் ராணுவ வீரர்களின் இந்த போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறப் படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி உறுதி
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 1965-ம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் போர் நினைவிடங்களில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் மோடி நேற்று கலந்துரையாடினார்.
அப்போது அவர் பேதும்போது, “ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் குறித்த அறிவிக்கையை தொடர்ந்து இத்திட்டத்தை முழுமையானதாக மாற்றுவதற்கு நீதிக் குழுவை எனது அரசு அமைக்கும். இத்திட்டத்தை அர்த்தமுள்ள வகையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே எனது கனவாகும். ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் குறித்த அறிவிக்கையில் குறைகள் இருந்தால் அதை நீதிக்குழு ஆராயும்” என்றார்.