

அதானி நிறுவனம் கேரள மக்களை 25 ஆண்டுகள் கொள்ளையடிக்க முதல்வர் பினராயி விஜயன் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும், அதானி குழு விவகாரத்தில் மத்திய அரசும், மாநில அரசும் பரஸ்பரம் ஊழலில் பங்கேற்கின்றன என்றும் கேரள மாநில எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ரமேஷ் சென்னிதலா குற்றம்சாட்டியுள்ளார்.
கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. கேரளாவில் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும்தான் கடுமையான போட்டி இருந்து வருகிறது. பாஜக தனித்து போட்டியிடுகிறது.
2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இதே கூட்டணி களம் கண்டன. ஆனால் இடதுசாரி கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் உள்ள வலிமை மிக்க ஈழவ சமூகம் சார்ந்த அரசியல் அமைப்பான பாரத் தர்ம ஜனசேனாவுடன் கூட்டணி வைத்து பாஜக போட்டியிட்டது. 15.8 சதவீத வாக்குகளுடன், ஓரிடத்தில் பாஜக வென்றது.
கேரளாவில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் இடையே மட்டுமே இதுவரை நேரடி போட்டி நிலவும் நிலையில் இந்த முறை தனது வாக்கு வங்கியை காண்பிக்கும் நோக்குடன் பாஜகவும் களமிறங்கியுள்ளது. தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில் கேரள மாநில எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ரமேஷ் சென்னிதலா ஹரிபாடு தொகுதியில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
கேரள மின்சார வாரியம் 2019-ம் ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் சோலார் எனர்ஜி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. 300 மெகாவாட் மின்சாரத்தை அடுத்த 25 ஆண்டுகளுக்கு வாங்கிக் கொள்ள இந்த ஒப்பந்தம் வழி செய்கிறது.
கேரள மின்சார வாரியம் அதானி குழும நிறுவனத்துடன் செய்துள்ள ஒப்பந்தத்தின்படி 8850 கோடி ரூபாய் மதிப்புள்ள மின்சாரம் வாங்கப்படுகிறது. இதன் மூலம் அதானி நிறுவனத்திற்கு 1000 கோடி ரூபாய் லாபம் கிடைக்கும்.
சூரிய ஒளி மின்சாரம் யூனின் 2 ரூபாய் என்ற அளவில் கிடைக்கும் நிலையில் ஒரு யூனிட் ரூ. 2.82 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஏறக்குறைய ஒரு யூனிட்டுக்கு ஒரு ரூபாய் வரை மக்கள் கூடுதலாக செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதுவும் 25 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் அதானி நிறுவனத்திற்கு 1000 கோடி ரூபாய் லாபம் கிடைக்கும். நீர் மின்சாரம் உட்பட கேரளாவில் பல திட்டங்கள் மூலம் ஒரு யூனிட் மின்சாரம் ஒரு ரூபாய்க்கு வாங்க முடியும். ஆனால் திட்டமிட்டு அதானி நிறுவனம் லாபம் சம்பாதிக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டிருப்பது ஏன். அதானி நிறுவனம் பயனடைய வேண்டும் என்பதற்காகவே மத்திய, மாநில அரசுகள் இணைந்து இந்த ஒப்பந்தத்தை செய்துள்ளன.
கேரளாவை அதானி நிறுவனம் 25 ஆண்டுகள் கொள்ளையடிக்க முதல்வர் பினராயி விஜயன் வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார், அதானி விவகாரத்தில் மத்திய அரசும், மாநில அரசும் பரஸ்பரம் இந்த ஊழலில் பங்கேற்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.