

பாஜகவின் அடையாளம், மணம், நிழல் உள்ள எந்த அரசையும் தமிழக மக்கள் விரும்பமாட்டார்கள். பாஜகவின் இந்தி, இந்துத்துவா திட்டம் மக்களைக் கோபப்படுத்துகிறது என்று காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிவகங்கை தொகுதி மக்களவை எம்.பி. கார்த்தி சிதம்பரம் பிடிஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது:
''தமிழக மக்களின் உணர்வுகள், தமிழ் மொழி, தமிழ் பாரம்பரியம் ஆகியவற்றுக்கு மதிப்பளிக்காத எந்த அரசையும் மக்கள் விரும்பமாட்டார்கள். பாஜகவின் அடையாளம், நிழல், மணம் உள்ள எந்த அரசையும் மக்கள் விரும்பமாட்டார்கள். பாஜகவின் இந்தி, இந்துத்துவா ஆகியவை தமிழக மக்களின் கோபத்தைத் தூண்டுகிறது. எந்த வடிவிலும் பாஜக வருவதை மக்கள் விரும்பவில்லை.
தமிழகத்துக்கு பிரதமர் மோடி எத்தனை முறை பயணம் செய்தாலும், பாஜக தலைவர்கள் பலமுறை பயணம் செய்தாலும், தமிழகத்தில் பாஜகவுக்கு எந்த எம்எல்ஏவும் இருக்கமாட்டார்கள். எம்.பி.யும் இருக்கமாட்டார்கள். தமிழகத்தில் பாஜகவின் நிலை பூஜ்ஜியம்தான். தமிழகத்துக்குப் பலமுறை பிரதமர் மோடி பயணித்தாலும், பாஜகவின் இந்தி, இந்துத்துவா கொள்கைகள் மக்களால் புறக்கணிக்கப்படும்.
கமல்ஹாசன் இந்தத் தேர்தலில் சூப்பர் நோட்டாவாகத்தான் இருப்பார். அவரின் கட்சி இந்தத் தேர்தலில் ஒரு இடத்தைக் கூட வெல்ல முடியாது, அவரின் கட்சி நிலையான கட்சியாக இருக்காது. தேர்தலுக்கு மட்டுமே கூடுவார்கள். அதன்பின் கலைந்துவிடுவார்கள்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பிரதான விஷயமாக இருப்பது கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசின் செயல்படாத் தன்மைதான். தமிழகத்தில் சராசரி மனிதரின் வாழ்க்கைத் தரம் உயரவில்லை. அதிமுக அரசில் ஊழல் மற்றும் நிர்வாகமின்மை பரவிக் கிடக்கிறது. அரசின் ஒப்பந்தங்களைச் சிலருக்கு மட்டும் வழங்குவது, பொதுத்துறையில் பணிகள் தரமற்ற முறையில் நடப்பது ஆகியவை முக்கியமான விஷயமாக எதிரொலிக்கும்.
கரோனா தொற்றுக் காலத்தில் ஏழை மக்களுக்கு நேரடியாக அதிமுக அரசு பணத்தை வழங்கவில்லை. ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் ஆயிரம் ரூபாய் கொடுத்தார்கள். இது மக்களுக்குப் போதுமானதாக இல்லை.
அதிமுகவுக்குள் தற்போது சிக்கல்கள் இருந்தாலும் அதனால், திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு எந்தப் பயனும் இல்லை. அதிமுக கட்சி ஒருங்கிணைந்து இருந்தாலும் மக்கள் அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கமாட்டார்கள். அது மக்களவைத் தேர்தலிலேயே தெளிவாகத் தெரிந்துவிட்டது.
டிடிவி தினகரனின் அமுமுக கட்சியின் வாக்குகளை, அதிமுகவோடு சேர்த்தாலும், தேர்தலில் அதிமுக தோல்வி அடையும்.
இந்தத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி அமோகமான வெற்றி பெறும். 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் வெற்றி மீண்டும் சட்டப்பேரவைத் தேர்தலில் எதிரொலிக்கும். 234 தொகுதிகளில் 200 இடங்களை திமுக கூட்டணி வெல்லும்.
நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டதற்கு நான் வாழ்த்துகள் தெரிவிக்கிறேன். திரையுலகில் நீண்ட காலம் இருக்கிறார். தொடர்ந்து அவர் திரையுலகில் இருக்க வேண்டும். இந்த விருது தேர்தலில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ரஜினிகாந்த் மீது சவாரி செய்ய பாஜக பல முறை முயன்றது. ஆனால், எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது''.
இவ்வாறு கார்த்தி சிதம்பரம் தெரிவித்தார்.