‘‘லாக்டவுனை யாரும் விரும்பவில்லை; உத்தவ் தாக்கரே இரவு 8.30 மணிக்கு மகாராஷ்டிர மக்களுக்கு உரையாற்றுகிறார்’’ - மும்பை மேயர் அறிவிப்பு

‘‘லாக்டவுனை யாரும் விரும்பவில்லை; உத்தவ் தாக்கரே இரவு 8.30 மணிக்கு மகாராஷ்டிர மக்களுக்கு உரையாற்றுகிறார்’’ - மும்பை மேயர் அறிவிப்பு
Updated on
1 min read

லாக்டவுனை யாரும் விரும்பவில்லை, ஆனால் அச்சுறுத்தும் விதத்தில் கரோனா தொற்று உயர்ந்து வருகிறது, முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று இரவு 8.30 மணிக்கு மகாராஷ்டிர மக்களுக்கு உரையாற்றுகிறார் என மும்பை மேயர் கிஷோரி பென்ட்நேகர் தெரிவித்துள்ளார்.

கரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக ஓராண்டு ஆகும் நிலையில் பல மாநிலங்களில் பரவல் கட்டுக்குள் வந்தது. இந்தநிலையில்
கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தமிழகம் மத்தியபிரதேசம் ஆகிய மாநிலங்களில் அண்மையில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக மகாராஷ்ராவில் பாதிப்பு அதிகமாக உள்ளது.

கரோனா பரவலை கட்டுப்படுத்த முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் ஏற்கெனவே ஆலோசனை நடைபெற்றது. இந்தநிலையில் கரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இதுகுறித்த ஆய்வு செய்த மாநில அரசின் நிபுணர்கள் குழுவும் கரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர தீவிரமான கட்டுப்பாடுகள் அவசியம் என வலியுறுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையில் கரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று மீண்டும் ஆலோசனை நடத்துகிறார்.

இந்தக் கூட்டத்தில் அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். பல மாவட்டங்களில் தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அதன் பயன் குறித்து விரிவாக ஆலோசனை நடைபெறுகிறது.
கரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்துவது அவசியமா என்பது குறித்தும் ஆலோசனை நடைபெறுகிறது.

கிஷோரி பென்ட்நேகர்
கிஷோரி பென்ட்நேகர்

இதுகுறித்து மும்பை மேயர் கிஷோரி பென்ட்நேகர் கூறியதாவது:

கடந்த மார்ச் மாதம் முதலே மகாராஷ்டிராவில் கடுமையாக கரோனா பரவி வருகிறது. மக்களிடம் நாங்களும் தொடர்ந்து எச்சரித்து வருகிறோம். ஆனால் அவர்கள் அலட்சியத்துடனேயே உள்ளனர். மும்பையில் நிலைமை மோசமாக உள்ளது. நாள்தோறும் தொற்று அதிகரித்து வருகிறது. நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் அதற்கு ஏற்ப மருத்துவமனைகளை தயார் செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.

லாக்டவுனை யாரும் விரும்பவில்லை. ஆனால் அச்சுறுத்தும் விதத்தில் கரோனா தொற்று உயர்ந்து வருகிறது. எனவே கடுமையான நடவடிக்கை எடுப்பதை தவிர வேறு வழியில்லை. முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று இரவு 8.30 மணிக்கு மகாராஷ்டிர மக்களுக்கு உரையாற்றுகிறார்’’ எனக் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in