ஜம்மு காஷ்மீர் பாஜக நிர்வாகி வீட்டில் தாக்குதல்: 3 தீவிரவாதிகள் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை: பாதுகாப்புபடையினர் அதிரடி

தோபி மொஹல்லா பகுதியில் என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் ராணுவத்தினர் பாதுகாப்பில் ஈடுபட்ட காட்சி : படம் ஏஎன்ஐ
தோபி மொஹல்லா பகுதியில் என்கவுன்ட்டர் நடந்த இடத்தில் ராணுவத்தினர் பாதுகாப்பில் ஈடுபட்ட காட்சி : படம் ஏஎன்ஐ
Updated on
1 min read

ஜம்மு காஷ்மீர், புல்வாமா மாவட்டத்தில் பாஜக நிர்வாகி ஒருவரின் வீட்டில் தாக்குதல் நடத்தியதில் தொடர்புடைய 3 தீவிரவாதிகள் இன்று பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர்.

புல்வாமா மாவட்டத்தில் உள்ள காகாபோரா பகுதியில் உள்ள தோபி மொஹல்லா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாகப் பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, இன்று அதிகாலை பாதுகாப்புப்படையினர் அந்தப் பகுதியைச் சுற்றிவளைத்துத் தேடுதலில் ஈடுபட்டனர். அப்போது, திடீரென பாதுகாப்புப் படையினரை நோக்கி தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுத் தாக்குதல் நடத்தினர். இதற்குப் பாதுகாப்புப் படையினர் தரப்பிலும் பதிலடி தரப்பட்டது. இருதரப்பினரும் நடந்த கடுமையான மோதலில், 3 தீவிரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்ட 3 தீவிரவாதிகளிடம் இருந்து துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், பணம் ஆகியவற்றைப் பாதுகாப்புப்படையினர் கைப்பற்றினர்.இந்த 3 தீவிரவாதிகளும் எந்த அமைப்போடு தொடர்புடையவர்கள் என்பது தெரியவில்லை, தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகப் பாதுகாப்புப்படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

போலீஸ ஐஜி விஜயகுமார்
போலீஸ ஐஜி விஜயகுமார்

காஷ்மீர் போலீஸ் ஐஜி விஜய குமார் கூறுகையில் " இந்த 3 தீவிரவாதிகளும் நேற்று நவ்காம்பகுதியில் பாஜக நிர்வாகி அன்வர் அகமது வீட்டில் தாக்குதல் நடத்தியவர்கள் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இன்று நடந்த என்கவுன்ட்டரின்போது, பொதுமக்கள் இருவர் காயமடைந்தனர். அதில் ஒருவர் இஸ்ரத் ஜான்(வயது25), குலாம் நபி தார்(வயது42) இவர்கள் இருவரும் சம்பூரா புல்வாமா பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்கள் எஸ்எம்ஹெச்எஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்" எனத் தெரிவித்தார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in