Published : 02 Apr 2021 12:59 PM
Last Updated : 02 Apr 2021 12:59 PM

நந்திகிராமில் 5 நாட்கள் முடங்கிய மம்தா பானர்ஜி: மீண்டும் பிரச்சாரத்திற்கு புறப்பட்டார்

கொல்கத்தா

மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தான் போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் 5 நாட்கள் முடங்கியிருந்த நிலையில் மற்ற பகுதிகளில் பிரச்சாரம் செய்வதற்காக இன்று காலை புறப்பட்டுச் சென்றார்.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. முதல் இரண்டு கட்டத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. 2-ம் கட்டத் தேர்தல் நேற்று 30 தொகுதிகளுக்கு நடைபெற்றது. இதில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியும் ஒன்றாகும்.

இங்கு முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்து பாஜக சார்பில் சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார். திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராகவும், அமைச்சராகவும் இருந்த சுவேந்து அதிகாரி பின்னர் பாஜகவில் இணைந்து அக்கட்சி சார்பில் களமிறங்கியுள்ளார்.

இவர் தனது நாற்பதிற்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுடன் பாஜகவில் முதல் தலைவராக இணைந்தவர். இவரது போட்டியால் மம்தாவின் வெற்றி நந்திகிராமில் சவாலாக அமைந்து விட்டது. கடந்த 2011 மற்றும் 2016 ஆகிய2 தேர்தல்களிலும் மம்தா, பவானிபூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதற்காக அவர் தலா ஒரே ஒரு பிரச்சாரக் கூட்டத்தை மட்டும் பிரம்மாண்டமாக நடத்தி இருந்தார்.

இந்த முறை தொகுதி மாறி நந்திகிராமில் போட்டியிடுபவருக்கு சூழல் அதுபோல் இல்லை. இங்கு பாஜகவின் உத்தியால் முதல்வர் மம்தாவிற்கு நந்திகிராமில் தங்கி இருக்க வேண்டிய நெருக்கடி உருவானது.

நந்திகிராமில் முதல்வர் மம்தா கடந்த ஞாயிறு முதல் 5 நாட்களாகத் தங்கியிருந்தார். இதில், அத்தொகுதியில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு நாள் தீவிரப் பிரச்சாரம் செய்திருந்தார். இதனால்,அவர் மேற்கு வங்க மாநிலத்தின் மற்றப் பகுதிகளில் செய்யவிருந்த பிரச்சாரம் பாதிக்கப்பட்டது. திரிணமூல் காங்கிரஸின் பிரச்சாரத்தை முடக்க இந்த நெருக்கடியை பாஜக உருவாக்கியதாகக் கருதப்படுகிறது.

அத்தொகுதியின் தேர்தலில் குழப்பம் விளைவித்து வெல்ல பாஜக திட்டமிடுவதாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்த திரிணமூல் காங்கிரஸ் நந்திகிராமில் வெளியாட்களின் நடமாட்டம் அதிகரித்து விட்டதாகக் குறிப்பிட்டிருந்தது. இதில், உத்தரபிரதேசம் மற்றும் பிஹார் மாநிலத்தை சேர்ந்த வெளியாட்கள் இடம் பெற்றதாகக் கூறி சந்தேகத்திற்கு இடமாக மூன்று பேரையும்பிடித்து போலீஸில் ஒப்படைக்கப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

இதனால் முதல்வர் மம்தா நந்திகிராமில் கடந்த 5 நாட்களாகத் தங்கியிருந்தார். இந்தநிலையில் நந்திகிராமில் வாக்குப்பதிவு முடிவடைந்ததை தொடர்ந்து மம்தா பானர்ஜி இன்று காலை அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். நந்திகிராமில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கொல்கத்தா சென்ற அவர் அங்கிருந்து பிரச்சாரம் செய்ய மற்ற பகுதிகளுக்கு செல்கிறார். இன்று அவர் அலிபூர், கூச் பிஹார் உள்ளிட் மாவட்டங்களில் 3 பொதுக்கூட்டங்களில் பங்கேற்கிறார். நந்திகிராமில் இருந்து புறப்பட்டுச் சென்ற அவருக்கு திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் அவரை வழியனுப்பி வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x