

நாடு முழுவதும் புதிதாக 81,466 பேருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. இது கடந்த 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு பாதிப்பு என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் ஏற்பட்ட கரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி நேற்று ஒரே நாளில் 81,466 பேருக்குக் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
கடந்த அக்டோபர் 11ம் தேதிக்குப் பிறகு இந்தளவு அதிக எண்ணிக்கையில் கரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 1.23 கோடியாக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், கர்நாடகா, பஞ்சாப், கேரளா, தமிழ்நாடு, குஜராத், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மட்டுமே 84.61 சதவீத பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து இம்மாநிலங்களில் கரோனா பாதிப்பு அதிகமாகவே இருக்கிறது. ஒரே நாளில் 469 பேர் கரோனாவால் உயிரிழந்தனர்.
மும்பையில், ஒரே நாளில் 8646 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தலைநகர் டெல்லியில் 1819 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி 16ம் தேதி நாட்டில் கரோனா தடுப்பூசி பணி தொடங்கியது. இதுவரை 6,87,89,138 பேர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.