

பேஸ்புக்கில் சட்டமன்றத் தேர்தல்தொடர்பாக பரப்பப்படும் வெறுப்புக் கருத்துகள் உடனடியாக நீக்கப்படும் என்று பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது
மேற்கு வங்க மாநிலம் மற்றும்அசாமில் சட்டமன்றத் தேர்தல்தொடங்கிவிட்டது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியில் சட்டமன்றத் தேர்தல் அடுத்த வாரம் நடைபெற இருக்கிறது. இந்நிலையில் தேர்தல் தொடர்பான வெறுப்புக் கருத்துகள், தவறான தகவல்கள், வாக்குக்குப் பணம் வாங்க அறிவுறுத்தல் போன்ற பதிவுகள் கண்டறியப்பட்டு நீக்கப்படும் என்று பேஸ்புக் நிறுவனம் நேற்று முன்தினம் அறிவித்துள்ளது.
சட்டமன்றத் தேர்தலையொட்டி வெறுப்புப் பிரச்சாரங்கள், தவறானதகவல்கள் குறித்து பேஸ்புக் புதிய கொள்கைகளை உருவாக்கியுள்ளது. அவற்றை மீறும் பதிவுகளைக் கண்டறிந்து நீக்கும். பகிரப்படும் தகவல்களின் உண்மைத் தன்மையை சரிபார்ப்பதற்காக எட்டு வெளிநிறுவனங்களுடன் பேஸ்புக் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்தியாவில் 40 கோடி பயனாளர்களைக் கொண்டிருப்பதாகவும், வெறுப்புப் கருத்துகளை கண்டறியும் தொழில்நுட்பங்களில் முதலீடு செய்யதிருப்பதாகவும் பேஸ்புக் குறிப்பிட்டுள்ளது.
‘வாக்களிக்க செல்லாதீர்கள், கரோனா வந்துவிடும்’ என்பதாகபரப்படும் செய்திகள் நீக்கப்படும்என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ட்விட்டர் நிறுவனமும் பொய்ச்செய்திகள் பகிரப்படுவதைக் கட்டுப்படுத்த புதிய வழிகாட்டுதல்களைக் கடந்த வாரம் வெளியிட்டது. இந்த இரு சமூக வலைதள நிறுவனங்களும் சுதந்திரமான, நியாமான முறையில் தேர்தல் நடக்க உதவி செய்வதாக தேர்தல் ஆணையத்துக்கு உறுதியளித்துள்ளன.