Published : 02 Apr 2021 03:11 AM
Last Updated : 02 Apr 2021 03:11 AM

தெலங்கானாவின் யாதகிரிகுட்டாவில் ஏழுமலையான் கோயிலுக்கு நிகராக ரூ.1,800 கோடியில் கட்டப்படும் லட்சுமி நரசிம்மர் கோயில்

தெலங்கானா மாநிலத்தில் ரூ.1,800 கோடி செலவில் கட்டப்பட்டு வரும், யாதாத்ரி ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோயில்.

ஹைதராபாத்

ஆந்திராவின் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நிகராக, தற்போது தெலங்கானா மாநிலத்தில் உள்ள யாதாத்ரி புவனகிரி மாவட்டத்தில், யாதகிரி குட்டாஎனும் தலத்தில் ரூ.1,800 கோடி செலவில்லட்சுமி நரசிம்மர் கோயில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. பழமையான பிரசித்தி பெற்ற இக்கோயிலுக்கு 7-ம் நிஜாம் மன்னர் நன்கொடை கொடுத்த வரலாறும் உள்ளது.

தெலங்கானா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற யாதாத்ரி அல்லது யாதகிரிகுட்டா கோயில் உள்ளது. இது ஒரு குகைக்கோயிலாகும். இக்கோயிலில் மூலவரான லட்சுமி நரசிம்மர் மிகவும் சக்தி வாய்ந்தவர் என கூறப்படுகிறது. பஞ்ச நரசிம்ம ஷேத்திரத்தில் இதுவும் ஒன்றாகும். மேலும் இத்திருத்தலத்தை ரிஷி ஆராதனை ஷேத்திரம் என்றும் அழைக்கின்றனர். இத்திருக்கோயில் தெலங்கானா தலைநகரமான ஹைதராபாத்தில் இருந்து 62 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.

தற்போது, இந்த கோயிலை தெலங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ், திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நிகராக மாற்றும் வகையில்புதிய கட்டுமான பணிகளை மேற்கொண்டுவருகிறார். இதற்காக தெலங்கானா அரசுரூ.1,800 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு இக்கோயிலின் கட்டுமான பணிகள் தொடங்கின. இதற்கென யாதாத்ரி கோயில் வளர்ச்சி குழுவை முதல்வர் சந்திரசேகர ராவ் அமைத்தார். இந்த குழுவினரின் மேற்பார்வையில் மிக பிரம்மாண்டமான முறையில் யாதாத்ரி லட்சுமி நரசிம்மர் கோயில் கட்டப்பட்டு வருகிறது.

ஆகம சாஸ்திரங்களின்படி கட்டப்பட்டு வரும் இக்கோயில் சிமெண்ட், மணல்,இரும்பு போன்றவைகளால் கட்டப்படாமல், வெறும் கற்களால் மட்டுமே கட்டப்பட்டு வருகிறது. சுவாமியின் சிலைகள் அனைத்தும் ‘கிருஷ்ண சிலா’ அல்லது புருஷ சிலா என்றழைக்கப்படும் கற்களால் செய்யப்பட்டு வருகிறது. ஸ்திரீ சிலா எனும் கற்கள் மூலம் பெண் கடவுள்களின் சிலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. மற்றும் நபுசகா சிலா என்றழைக்கப்படும் கற்கள் மூலம் கோயிலில் தரை மற்றும் சுவர்கள் கட்டப்பட்டு வருகிறது. மேலும், கருப்பு நிற கிரானைட் கற்களும் இக்கோயிலில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன.

இவை, தெலங்கானா மாநில காக்கதீயர்களின் காலத்தில் வடிவமைக்கப்பட்ட கட்டிட கலையை மாதிரியாக கொண்டுகருப்பு கிரானைட் கற்கள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. கருப்பு கிரானைட் கற்கள் மூலம் சில சிலைகளும் செதுக்கப்பட்டுள்ளன.

இந்த கோயிலில் உள்ள மூலவர் 12 அடி உயரமும், 30 அடி நீளமும் கொண்ட குகையில் வீற்றிருப்பார். இது தற்போது புதிய வடிவமைப்பில், கோயிலின் பின்புறம் அமைந்துள்ளது. இந்த குகைக்கு செல்ல வேண்டுமாயின், பக்தர்கள் படிக்கட்டுகள் மூலம் இறங்கிசுவாமியை தரிசிக்க வேண்டி வரும். மேலும், இக்கோயிலில் நாக வடிவில் உள்ள ஜுவாலா நரசிம்மர், யோக முத்திரையில் யோக நரசிம்மர், வெள்ளியில் லட்சுமி நரசிம்மர் ஆகியோர் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். கோயிலின் வலது புறம் ஹனுமன் கோயில் உள்ளது.

பிரசித்தி பெற்ற இந்த வைணவ திருத்தலத்திற்கு தினமும் தற்போது ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோயில் கட்டிட பணிகள் நடைபெற்று வந்தாலும், மூலவரை தரிசிக்காவிடிலும் பாலாலயம் மூலம் சுவாமியை தரிசித்து விட்டு செல்கின்றனர். இக்கோயிலுக்கு 39 கிலோ தங்கமும், 1,753 டன்வெள்ளியும் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. விமான கோபுரம், பலிபீடம், கொடி கம்பம் போன்றவற்றுக்கு தங்க தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும்கோயில் கதவுகள், வாசற்படிகள், சுவர்களுக்கு வெள்ளி தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. இரு கற்களுக்கிடையே பழங்காலத்தில் உபயோகப்படுத்தப்பட்ட சுண்ணாம்பு கலவை இக்கோயிலில் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. ரூ.300கோடி செலவில் கோயிலின் சுற்றுப்புறத்தில் உள்ள சுமார் 1,900 ஏக்கர் தனியார் இடங்கள் வாங்கப்பட்டுள்ளன.

இக்கோயிலுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு குளத்தின் அருகே புதிதாகவீடும் கட்டி தரப்பட்டுள்ளது. 7-ம் நிஜாம்மன்னரான மிர்-ஒஸ்மான் அலிகான் என்பவர், தனது ஆட்சி காலத்தில் ரூ.82,825-ஐ இக்கோயிலுக்கு காணிக்கையாக வழங்கி உள்ளார்.

14 ஏக்கர் பரப்பளவு

இக்கோயில் 14 ஏக்கர் பரப்பளவில் உருவாகி வருகிறது. மொத்தம் 7 கோபுரங்கள் உள்ளடக்கிய இக்கோயில் விரத பீடம், சுவாமிக்கான பூந்தோட்டம், கல்யாண மண்டபம், சத்திரங்கள் ஆகியவைகட்டப்பட்டுள்ளன. மேலும் 12 ஆழ்வார்களை குறிக்கும் வகையில் 12 மிகப்பெரிய தூண்களும் அமைக்கப்பட்டுள்ளன. கோயிலின் முகப்பில் ஒரு வளைவு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வளைவு பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இங்குள்ள விஷ்ணு குண்டம் எனும் குளத்தில் குளித்தால் தீய சக்திகள் மறையும் என்பது ஐதீகம்.

மிக அழகாகவும், கம்பீரமாகவும் கட்டப்பட்டு வரும் இக்கோயில் தெலங்கானா மாநிலத்தின் ஒரு அடையாளமாக மாறப்போவது உறுதி. இக்கோயில் தலைமை ஸ்தபதி சவுந்தர்ராஜன் என்பவர் மூலம் கட்டப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x