

கர்நாடக முதல்வர் எடியூரப்பா வுக்கும் ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை அமைச்சர் ஈஸ்வரப்பாவுக்கும் மோதல் இருந்து வருகிறது. குருபா சாதியினருக்கான நிதி ஒதுக்கீடு, அமைச்சரவையில் துறை ஒதுக்கீடு ஆகியவற்றில் மறைமுகமாக மோதல் நீடித்தது. எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து மாற்ற ஈஸ்வரப்பா ஆதரவாக இருந்ததாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் மாநில ஆளுநர்வாஜுபாய் வாலாவுக்கு ஈஸ்வரப்பா புகார் மனு ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “முதல்வர் எடியூரப்பா எனது துறையில் முறையான ஆலோசனை இல்லாமல் அத்துமீறி தலையீடு செய்கிறார்.
எடியூரப்பாவின் உறவினர் தலைவராக உள்ள பெங்களூரு புறநகர் மாவட்ட வளர்ச்சித் துறைக்கு என்னுடைய ஒப்புதல் இல்லாமல் நேரடியாக ரூ.65 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல முதல்வருக்கு நெருக்கமான எம்எல்ஏ.க்களின் கோரிக்கையை ஏற்று முதல்கட்டமாக ரூ. 774 கோடியும், 2-ம் கட்டமாக ரூ. 640 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதுவும் எனது கவனத்துக்கு கொண்டுவரப்படாமல், முதன்மைச் செயலருக்கு அழுத்தம் கொடுத்து நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
இது தொடர்பான எனது ஆட்சேபத்தை எடியூரப்பாவுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளேன். இருப்பினும் அவரது போக்கில் மாற்றம் இல்லாததால் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோருக்கும் கடிதம் எழுதியுள்ளேன். அமைச்சர்களின் அதிகாரத்தில் தலையிட வேண்டாம் என எடியூரப்பாவுக்கு அறிவுரை வழங்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஈஸ்வரப்பா தனது கடிதத்தை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, மேலிட பொறுப்பாளர் அருண் சிங் ஆகியோருக்கும் அனுப்பியுள்ளார்.எடியூரப்பா வுக்கு எதிராக ஈஸ்வரப்பா திடீர் போர்க்கொடி தூக்கியுள்ளதால் கர்நாடக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
காங்கிரஸ் கோரிக்கை
மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் கூறும்போது, “முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக மூத்த அமைச்சர் ஒருவரே ஆளுநரிடம் புகார் அளித்திருப்பது தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. தார்மீக அடிப்படையில் முதல்வர் பதவி விலக வேண்டும்’’ என்று கூறி யுள்ளார்.