

அசாமில் மொத்தமுள்ள 126 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு 3 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 27-ம் தேதி முதல்கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் 47 தொகுதிகள் தேர்தலை சந்தித்தன. 39 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற் றது. மூன்றாம் கட்ட தேர்தல் 6-ம் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு, அங்குள்ள கோக்ரஜார் மாவட்டத்தில் பாஜக சார்பில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி கலந்து கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அவர் பேசியதாவது:
அசாமில் மிக நீண்டகாலமாக காங்கிரஸ் தான் ஆட்சி செய்து வந்தது. எனினும், அவர்களின் ஆட்சிக்காலத்தில் அசாமுக்கும், மாநில மக்களுக்கும் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. வெடிகுண்டு மற்றும் துப்பாக்கி கலாச்சாரத்தை மட்டுமே மாநிலத்தில் காங்கிரஸ் வளர்த்தது. அசாமில் பாஜக ஆட்சி அமைந்த கடந்த 5 ஆண்டுகளில், மாநிலத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு இருக்கின்றன. லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். கோக்ரஜார் மாவட்டத்தில் பெரும் வன் முறைகளை அரங்கேற்றிய ஏஐடியுஎப் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது. ஏஐடியுஎப் கட்சியினர்தான் அசாமின் அடை யாளம் என காங்கிரஸ் கூறுகிறது. அப்படியென்றால், இங்கு காலம் காலமாக வாழ்ந்து வரும் மக்கள் யார்? அவர்கள் அசாம் குடிமக்கள் இல்லையா? மக்களுக்கு காங்கிரஸ் துரோகம் இழைக்கிறது. இதனை மக்கள் மறக்க மாட்டார்கள். வரும் தேர்தலில் காங்கிரஸுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
கால்பந்தாட்டத்துக்கு புகழ் பெற்ற மண்ணான அசாமில், காங்கிரஸுக்கு மக்கள் மீண்டும் ‘சிகப்பு கார்டு' காண்பிக்க தயாராகி விட்டார்கள். இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.