Last Updated : 01 Apr, 2021 07:43 PM

 

Published : 01 Apr 2021 07:43 PM
Last Updated : 01 Apr 2021 07:43 PM

ரஜினிக்கு தாதா சாகேப் பால்கே விருது; தேர்தல் நேரத்தில் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?- காங்கிரஸ் கேள்வி

நடிகர் ரஜினிகாந்த்: கோப்புப் படம்.

புதுடெல்லி

நடிகர் ரஜினிகாந்துக்கு முன்கூட்டியே தாதா சாகேப் பால்கே விருது வழங்கியிருக்க வேண்டும். தேர்தல் நேரத்தில் இந்த ஆண்டு ஏன் அறிவிக்கப்பட்டது என்று காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

இந்தியத் திரைப்படத் துறையில் வழங்கப்படும் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது இன்று நடிகர் ரஜினிகாந்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. திரைத்துறையில் நடிகர் ரஜினிகாந்த் அளித்த பங்களிப்புகள், சேவைகள் ஆகியவற்றைப் பாராட்டும் விதமாக இந்த விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது. மே 3-ம் தேதி இந்த விருது நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்படும்.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நேரத்தில் நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருதை மத்திய அரசு அறிவித்துள்ளது குறித்து காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராஜீவ் சுக்லா டெல்லியில் இன்று நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''நடிகர் ரஜினிகாந்த் திரையுலகில் மிகவும் மதிக்கப்படக்கூடிய நடிகர். நம்முடைய பிரபலங்களைத் தேவையில்லாமல் அரசியல் சிக்கல்களுக்குள் மத்திய அரசு இழுத்துவிடக் கூடாது.

ஒவ்வொன்றிலும் அரசியல்ரீதியான ஆதாயங்களை மத்திய அரசு எதிர்பார்த்துச் செயல்படவும் கூடாது. ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது நீண்ட காலத்துக்கு முன்பே வழங்கப்பட்டிருக்க வேண்டும். தமிழகத்தில் தேர்தல் நடக்கும் நேரத்தில் இந்த ஆண்டு இந்த விருது ஏன் அறிவிக்கப்பட்டது? இதுபோன்ற விஷயங்களில் மத்திய அரசும், பாஜகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ராஜீவ் சுக்லா

மத்திய அரசு என்ன செய்தாலும் அரசியல் நோக்கத்தோடு செய்வது முறையானது அல்ல. ஆனால், மக்கள் அனைத்தையும் கவனிக்கிறார்கள் என்பதை மனதில் வையுங்கள்.

மத்திய அரசு தேர்தல் நோக்கில், தான் செய்யும் அனைத்துச் செயல்களிலும் அரசியல் ஆதாயம் பெறும் நோக்கில் செயல்பட்டால், அது அரசியலில் முறையான செயல் அல்ல.

நடிகர் ரஜினிகாந்த் அனைத்துத் தரப்புகளிலும் பரவலாக மதிக்கப்படக்கூடிய மனிதர். நாங்கள் அனைவரும் அவரை மதிக்கிறோம். அவரின் சினிமா வாழ்க்கை மேலும் சிறப்படைய வாழ்த்துகிறோம்''.

இவ்வாறு ராஜீவ் சுக்லா தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x