ஏழை மக்கள் கையில் பணம் கொடுத்தால்தான் பொருளாதாரம் வளரும்; கார்ப்பரேட்டுகளிடம் அல்ல: பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி சாடல்

வயநாட்டில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசிய காட்சி: படம் உதவி | ட்விட்டர்.
வயநாட்டில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசிய காட்சி: படம் உதவி | ட்விட்டர்.
Updated on
2 min read

பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல ஏழை மக்கள் கையில் பணத்தை வழங்கிட வேண்டும். ஆனால், பிரதமர் மோடி கார்ப்பரேட்டுகளுக்குப் பணம் வழங்கி உதவுகிறார் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கும் வரும் 6-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்கிறது. தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், வயநாடு தொகுதியில் உள்ள சுல்தான் பத்ரி, மணன்தாவடி ஆகிய பகுதிகளில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, ஊர்வலமாகச் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேசியதாவது:

''மிகப்பெரிய கார்ப்பரேட்டுகளிடம் பணத்தை வழங்கினால் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்குத் திருப்பிவிடலாம் என்று பிரதமர் மோடி நம்புகிறார். ஆனால், மிகப்பெரிய கார்ப்பரேட்டுகளிடம் பணத்தைக் கொடுத்தால், அதை நாட்டிலிருந்து வெளியே கொண்டு சென்றுவிடுவார்கள்.

நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு காங்கிரஸ் கட்சியிடம் தீர்வுகள் இருக்கின்றன. கேரளாவின் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்ல, நாங்கள் நியாய் திட்டத்தைச் செயல்படுத்தக் கூறுகிறோம். இந்தத் திட்டத்தால் ஏழை மக்கள் மட்டுமல்ல, கேரளப் பொருளாதாரத்தையும் ஊக்கப்படுத்தலாம், வேலைவாய்ப்பும் பெருகும்.

இந்த நியாய் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் ஏழை மக்களின் வங்கிக் கணக்கில் ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். நீங்கள் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதைக்குத் திருப்ப விரும்பினால், முதலில் பணத்தை ஏழை மக்கள் கைகளில் கொடுக்க வேண்டும், சாமானிய மக்களின் கைகளில் பணம் புழங்க வேண்டும்.

பொருளாதாரத்தை வேகப்படுத்த விரும்பினாலோ, வேலைவாய்ப்பை உருவாக்க விரும்பினாலோ, முதலில் செய்ய வேண்டியது, பணத்தைப் பொருளாதாரத்தில் செலுத்த வேண்டும். ஆனால், பிரதமர் மோடியோ கார்ப்பரேட்டுகளிடம் பணத்தை வழங்குகிறார். விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 கிரிமினல் சட்டங்களை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து எதிர்த்து வருகிறது, இனிமேலும் எதிர்ப்போம்".

இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in