

மேற்குவங்கத்தில் பாஜகவினர், ஏன் கோபம் சகோதரி? என்ற வாசகம் பொறித்த டி-சார்ட் அணிந்து தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இதில் முதல்கட்டத் தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெற்றது. 2-ம் கட்டத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது.
இந்தத் தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி கடுமையாகப் போராடி வருகிறது.
அதேநேரத்தில் மம்தாவுக்கு கடும் நெருக்கடியும், சவால்களையும் அளித்துவரும் பாஜக ஆட்சியைப் பிடிக்க பல்வேறு திட்டங்கள் தீட்டி, காய்களை நகர்த்தி வருகிறது. இந்தத் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
மற்றொரு புறம் காங்கிரஸ் - இடதுசாரிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றனர். பிஹார் சட்டப்பேரவையில் நடந்த தேர்தலில் 5 இடங்களில் வெற்றி பெற்ற ஏஐஎம்ஐஎம் கட்சி மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலிலும் போட்டியிடுகிறது.
இதனால் மேற்கு வங்கத்தில் நாள்தோறும் கட்சித் தலைவர்களுக்கு இடையே பரபரப்பான வாதங்கள், அறிக்கைகள் அனல் பறக்க வெளியாகி வருகின்றன.
இந்தநிலையில் மேற்குவங்க மாநிலம் உலுபெரியா தொகுதியில் பிரதமர் மோடி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்காக உலுபெரியா தொகுதியில் பிரமாண்டக் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தொண்டர்கள் வித்தியாசமான டி-சர்ட் அணி்ந்து பங்கேற்றனர். அதில் ஏன் கோபம் சகோதரி? என வாசகம் வங்க மொழியில் பொறிக்கப்பட்டு இருந்தது.
அத்துடன் கோபத்தை குறிக்கும் உருவக குறியீடும் பொறிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி ஏராளமான டி-சர்ட்டுகள் கூட்டத்தில் பங்கேற்ற பாஜக தொண்டர்களுக்கு வழங்கப்பட்டது. பாஜக ஆதரவாளர்கள் வித்தியாசமான முறையில் டி-சர்ட் அணிந்து வலம் வந்து பிரச்சாரம் செய்கின்றனர்.