

கேரளாவில் லவ் ஜிகாத்துக்கு எதிராகச் சட்டம் கொண்டுவருவதற்கு காங்கிரஸ் கட்சியும் மறுக்கிறது. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிலான இடதுசாரி அரசும் மறுக்கிறது என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டினார்.
கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் 6-ம் தேதி தேர்தல் நடக்கிறது. தேர்தல் பிரச்சாரம் முடிய இன்னும் 3 நாட்கள் மட்டுமே இருப்பதால், பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.
ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள ஹரிபாட் தொகுதியில் பாஜக வேட்பாளரை ஆதரித்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
''கேரளாவில் தங்கக் கடத்தல் சம்பவம் இந்திய வரலாற்றில் வெட்கப்பட வேண்டிய சம்பவமாகும். இந்தத் தங்கக் கடத்தல் வழக்கில் முதல்வர் அலுவலகமே ஈடுபட்டுள்ளது. முதல்வரின் தனிப்பிரிவுச் செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது வெட்கக்கேடானது.
கேரள மாநிலத்தில் லவ் ஜிகாத்தைத் தடுக்க சட்டம் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி வருகிறோம். ஆனால், மாநிலத்தை ஆண்ட காங்கிரஸ் கட்சியும், ஆள்கின்ற இடதுசாரி அரசும் அதைச் செய்ய முன்வரவில்லை. 2009-ம் ஆண்டு லவ் ஜிகாத் குறித்து கேரள உயர் நீதிமன்றமே கவலை தெரிவித்து, தடுக்க சட்டம் கொண்டு வாருங்கள் என்று கூறிய நிலையில், இன்னும் சட்டம் இயற்றப்படவில்லை.
கேரளாவில் ஏன் லவ் ஜிகாத்துக்கு எதிராகச் சட்டம் இயற்றவில்லை. கேரளாவில் உள்ள பெண்கள் குறிவைக்கப்படும்போது, ஏன் எல்டிஎஃப் அரசும், யுடிஎஃப் அரசும் லவ் ஜிகாத்துக்கு எதிரான சட்டத்தை இயற்றாமல் இருக்கின்றன.
பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா, எஸ்டிபிஐ ஆகிய அமைப்புகளிடம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இந்த இரு அமைப்புகளும் பல்வேறு சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுகின்றன. மாநிலத்தை ஆபத்தான சூழலுக்குத் தள்ளுகின்றன. ஆனால், யுடிஎஃப், எல்டிஎஃப் ஆகிய கூட்டணிகளும் கண்களில் துணியைக் கட்டிக்கொண்டு ஏதும் நடக்காததுபோல் இருந்து நடவடிக்கை எடுக்க மறுக்கிறார்கள். இவர்களின் இந்தச் செயல் வாக்கு வங்கி அரசியலுக்காகத்தான். மக்களையும் ஏமாற்றுகிறார்கள்.
மாநிலத்தில் ஆளும் எல்டிஎஃப் தலைமையிலான இடதுசாரிகள் கூட்டணி கரோனா வைரஸ் பரவலைச் சரியாகக் கையாளவில்லை, அரசு எந்திரமே முழுமையாகத் தோல்வி அடைந்துவிட்டது.
5 ஆண்டுகள் ஒப்பந்தத்தில் எல்டிஎஃப், யுடிஎஃப் கூட்டணி மாறி மாறி ஆட்சியில் அமர்கின்றன. இவர்களின் நோக்கம் என்பது, தேவையானவர்களுக்குப் பதவிகளை வழங்குவது, ஊழலை ஊக்குவிப்பதாகும். வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவது பற்றிக் கவலைப்படவில்லை.
இரு கட்சியினரும் தங்களுக்குள் போட்டியிடுகிறார்களே தவிர, வளர்ச்சிக்காகப் போட்டியிடவில்லை. கேரளா வளர்ச்சிப் பாதைக்குச் செல்லும் ஒரே வழி, மாநிலத்தில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வருவதுதான். விவசாயிகளுக்கு உதவவும், மீனவர்கள் நலன் காக்கவும், இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறவும் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டும்''.
இவ்வாறு யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.