

நாடுமுழுவதும் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இன்று முதல் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில் மக்கள் ஆர்வத்துடன் ஊசி போட்டுக் கொள்கின்றனர். மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களிலும் மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதன் காரணமாக பல மாநிலங்களில் பரவல் கட்டுக்குள் வந்து இயல்பு நிலையும் திரும்பியது. இந்தநிலையில் மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, தமிழகம் மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அண்மையில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தினசரி கோவிட் பாதிப்பு அதிகரித்துள்ள மாநிலங்களில், ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை அதிகரிக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து கரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன.
இந்தநிலையில் கரோனா தடுப்புக்காக கோவேக்ஸின் மற்றும் கோவிஷீல்டு ஆகிய தடுப்பு மருந்துகள் அவசரக்கால பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. முதல்கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கப்பட்டது. கரோனா தடுப்பூசி பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்வதற்கு வசதியாக, ‘கோவின்’ என்ற பெயரில் புதிய செயலி (ஆப்) ஒன்றை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
முதற்கட்டமாக மருத்துவப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி வழங்கப்பட்டது, இரண்டாம் கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்ட இணைநோய் கொண்டவர்களுக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டது.
இந்நிலையில் இன்று (ஏப்ரல் 1ம் தேதி) முதல், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் (இணைநோய் இல்லாதோருக்கும்) தடுப்பூசி வழங்கப்படுகிறது. நாடுமுழுவதும் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அரசு மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மக்கள் காத்திருந்து தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர்.
கரோனா தடுப்பூசியை பொறுத்தவரையில் மக்கள் தங்களுக்குள்ள சுற்று வரும் வரை காத்திருகு்க வேண்டும், குறிப்பாக அரசியல் தலைவர்கள் முந்திக் கொண்டு கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டாம் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்து இருந்தார்.
இதனால் 60 வயதுக்குட்பட்ட அரசியல் தலைவர்கள் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாமல் பொறுமை காத்தனர். ஆனால் தற்போது வயது வரம்பு 45 ஆக குறைக்கப்பட்டுள்ளதால் அந்த வயதில் உள்ள அரசியல் தலைவர்கள் முதல் நாளான இன்றே கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர்.
நாட்டின் பல பகுதிகளிலும் மக்கள் இன்று ஆர்வத்துடன் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர். அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 6,30,54,353 பேர் கரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளனர்.