

சர்க்கஸ் நடத்துகிறீர்களா அல்லது அரசு நிர்வாகம் நடத்துகிறீர்களா என்று சிறுசேமிப்புக்கான வட்டி வாபஸ் விவகாரம் குறித்து மத்திய நிர்மலா சீதாராமனுக்கு காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
சேமிப்புத் திட்டங்கள், டெபாசிட்கள் போன்றவற்றுக்கு ஒவ்வொரு காலாண்டுக்கும் ஒரு முறை மத்திய அரசு வட்டியை மாற்றி வருகிறது. அந்த வகையில் செல்வமகள் சேமிப்புத் திட்டம், தேசிய சேமிப்புப் பத்திரம் உள்ளிட்ட பல்வேறு சிறுசேமிப்புகளுக்கான வட்டி வீதத்தை 1.1 சதவீதம் வரை குறைத்து மத்திய நிதியமைச்சகம் நேற்று இரவு அறிவிப்பு வெளியிட்டது.
நடுத்தரக் குடும்பங்கள், ஏழைகள் பெரும்பாலும் இதுபோன்ற சிறுசேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்து, தங்களின் எதிர்கால நலன்களுக்காகச் சேர்த்து வைத்துள்ளனர். அவர்களின் முதலீட்டின் மீது விழுந்த அடியாக சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டிக் குறைப்பு இருந்ததால், பெரும் அதிருப்தி உருவானது.
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்ததையடுத்து, குறைக்கப்பட்ட சிறுசேமிப்பு வட்டிக்கான அறிவிப்பை வாபஸ் பெறுவதாக நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்தார். 2021, மார்ச் காலாண்டில் இருந்தபடியே வட்டி வீதம் தொடரும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
நிர்மலா சீதாராமன் அறிவிப்பு குறித்து காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், "மத்திய அரசின் சிறுசேமிப்புத் திட்டங்களுக்கு வட்டியைக் குறைத்து நிர்மலா சீதாராமன் அறிவித்தது உண்மையில் உங்களை அறியாமல் நடந்த தவறா அல்லது தேர்தலைக் கருத்தில் கொண்டு, அதன் விளைவுகளை உணர்ந்து, பின்னுணர்வுகளைப் புரிந்து வாபஸ் பெற்றுவிட்டீர்களா?" எனக் கேட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், "நிதி அமைச்சர் மேடம், நீங்கள் அரசாங்கம் நடத்துகிறீர்களா அல்லது சர்க்கஸ் காட்சி நடத்துகிறீர்களா?
கோடிக்கணக்கான மக்களை பாதிக்கும் இதுபோன்ற உத்தரவுகளைக் கவனிக்காமல் வெளியிடுகிறீர்கள் என்றால், இவர் எவ்வாறு நாட்டின் பொருளாதாரத்தை நிர்வாகம் செய்வார், நடத்துவார் என்று கற்பனை செய்து பாருங்கள். நீங்கள் நிதி அமைச்சராகத் தொடர உரிமை இல்லை" எனத் தெரிவித்தார்.