

இந்தியாவில் தாக்குதல் நடத்த சதித் திட்டம் தீட்டிய பாகிஸ்தான் தீவிரவாதிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து டெல்லி என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
பாகிஸ்தானிலிருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் காஷ்மீர் வழியாக இந்தியாவில் ஊடுருவி இருப்பதாக கடந்த 2016-ம் ஆண்டு உளவுத் துறை எச்சரிக்கை விடுத்தது. இதன் அடிப்படையில், காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பஹதுர் அலியை என்ஐஏ அதிகாரிகள் 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் கைது செய்தனர்.
அவரிடமிருந்து ஏகே-47 ரக துப்பாக்கி, கையெறிகுண்டுகள், துப்பாக்கி தோட்டாக்கள், வரைபடம், இந்திய பணம் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர்.
இதையடுத்து, டெல்லி என்ஐஏசிறப்பு நீதிமன்றத்தில் அலி மீது,இந்திய தண்டனை சட்டம், சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டம், ஆயுத சட்டம் உள்ளிட்டவற்றின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், டெல்லி உட்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் தாக்குதல் நடத்தும் சதித் திட்டத்துடன் பயிற்சி பெற்ற மேலும் பலர் ஊடுருவி இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
மேலும் லஷ்கர் அமைப்பின் பயிற்சி முகாம்,அந்த அமைப்புக்கு ஆள் சேர்த்தது, ஆயுத பயிற்சி அளித்தது உள்ளிட்ட பல்வேறு தகவல்களும் விசாரணையில் தெரியவந்தது. இதன் அடிப்படையில் 2017-ம் ஆண்டு அலி மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், அபு சாத் மற்றும் அபுதார்தா ஆகிய 2 லஷ்கர் தீவிரவாதிகள் குப்வாராவில் 2017-ல்நடந்த என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், பஹதுர் அலி மீதான வழக்கில் விசாரணை முடிந்த நிலையில், அவர் குற்றவாளி என கடந்த 26-ம் தேதி என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் அலிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக என்ஐஏ நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.