Published : 01 Apr 2021 03:15 AM
Last Updated : 01 Apr 2021 03:15 AM

தொழிலாளர் சட்ட விதிமுறைகள் ஏப்.1 முதல் அமல்படுத்தப்படாது; அடிப்படை சம்பள விகித மாற்றம் இல்லை: மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் தகவல்

புதுடெல்லி

தொழிலாளர் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட புதிய விதிகளின்படி அடிப்படை சம்பள விகித மாற்றம் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அமலுக்கு வராது என்று மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது மாதாந்திர சம்பளதாரர்களுக்கு சிறிதளவு ஆறுதல் அளிக்கும் விஷயமாகும்.

புதிய தொழிலாளர் சட்ட விதிமுறைகளை அமல்படுத்துவதற் கேற்ப மாநில அரசுகள் புதியவழிகாட்டு நெறிகளை இன்னமும்வகுக்கவில்லை. இதனால் இதைஉடனடியாக அமல்படுத்தப் போவதில்லை என அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொழிலாளர் சட்ட திருத்த மசோதாவின் நான்கு பிரிவுகளில் மாற்றங்கள் செய்து அதை அறிவிக்கையாக வெளியிடும்படி மாநில அரசுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது. மத்திய அரசின் தொழிலாளர் சட்ட மசோதாவுக்கு இணக்கமான அறிவிக்கையை மாநில அரசுகள் வெளியிடும்பட்சத்தில் சட்ட சிக்கல் ஏதும் உருவாவதை தவிர்க்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் இத்தகைய அறிவிக்கையை பல மாநில அரசுகளும் வெளியிடவில்லை. அதற்கான வழிகாட்டு விதிகளையும் உருவாக்கவில்லை.

புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டால் நிறுவனங்களில் ஊழியர்களின் சம்பள விகிதம் மாற்றம் செய்யப்பட வேண்டும். சிடிசி அடிப்படையில் ஊதியம் வழங்கும் ஒப்பந்த பணியாளர்களுக்கும் ஊதிய விகிதத்தில் மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கும். ஆனால் இந்த புதிய விதிமுறை அமல்படுத்தப்படாததால் இது நிறுவனங்களுக்கு மிகப் பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது.

மத்திய அரசின் தொழிலாளர் அமைச்சகம் நான்கு பிரிவுகளில் மாற்றங்கள் செய்வதற்கு தயாரான நிலையில் உள்ளது. ஆனால் இதற்கேற்ப மாநில அரசுகளும் தயாரான சூழலில் அதை உடனடியாக செயல்படுத்தலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் மட்டுமே இது தொடர்பான அறிக்கையை வெளியிட்டுள்ளது. உத்தரப் பிரதேசம், பிகார், உத்தராகண்ட், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநில அரசுகள் இது தொடர்பான வரைவு அறிக்கையை இரண்டு பிரிவுகளுக்கு மட்டுமே உருவாக்கியுள்ளன. கர்நாடக மாநில அரசு ஒரே ஒரு பிரிவுக்கான அறிவிக்கையை மட்டுமே வெளியிட்டுள்ளது.

தொழிலாளர் ஊதியம் தொடர்பான வரைவு மசோதாவுக்கு 2019-ம் ஆண்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. 2020ம் ஆண்டு செப்டம்பரில் சமூக பாதுகாப்பு வரைவுக்கு ஒப்புதல் அளித்தது. அத்துடன் தொழில்துறை உறவு மற்றும் பணி பாதுகாப்பு, சுகாதாரம், வேலை சூழல் ஆகியவை தொடர்பான திருத்தத்துக்கும் ஒப்புதல் தரப்பட்டது. ஏற்கெனவே இருந்த 29 தொழில் சட்டங்கள் நான்கு சட்டப் பிரிவுகளாக ஒருங்கிணைக்கப்பட்டன. இதன் மூலம் தொழில் தொடங்குவதை எளிமையாக்குவதே புதிய சட்ட திருத்தத்தின் நோக்கமாகும். அதேபோல தொழில் நிறுவனங்கள் தங்களின் வசதிக்கேற்ப பணி நேரத்தை மாற்றிக்கொள்ளவும் புதிய வரைவு வழி செய்துள்ளது.

புதிய தொழிலாளர் சட்டத்தின்படி ஊழியர்களின் அடிப்படை சம்பள விகிதம் அவர்கள் பெறும்மொத்த சம்பளத்தில் 50 சதவீதத்துக்கு மேல் இருக்கக்கூடாது. தற்போது பெரும்பாலான நிறுவனங்கள் அடிப்படை சம்பளத்தை 35 சதவீதம் முதல் 45 சதவீதம் வரை நிர்ணயித்து மீதியை பிற சலுகைகளாக அளிக்கின்றன. புதிய விதிமுறை அமலுக்கு வரும்பட்சத்தில் சிடிசி எனப்படும் ஊதிய விகிதத்தில் அடிப்படை சம்பள விகிதத்தை உயர்த்தியாக வேண்டும்.

புதிய விதிமுறையின்படி அனைத்து படிகளும் ஒருங்கிணைக்கப்படும். குறிப்பாக வீட்டுவாடகைப்படி, ஓவர் டைம் அலவன்ஸ், கட்டாய போனஸ், பிஎப் நிதியில் தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு ஆகிய அனைத்தும் மொத்த ஊதியத்தில் 50 சதவீதத்துக்கு அதிகமாக இருக்கக் கூடாது என்பது புதிய விதியாகும். ஊழியர்களுக்கு அளிக்கப்படும் பிற சலுகை ஊதியமானது 15 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கக் கூடாது என்பதாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x