Last Updated : 02 Nov, 2015 04:13 PM

 

Published : 02 Nov 2015 04:13 PM
Last Updated : 02 Nov 2015 04:13 PM

வரி ஏய்ப்பு செய்வது இனி கடினமாகிவிடும்: ஜேட்லி நம்பிக்கை

உலக அளவில் உடனுக்குடன் தானாகவே தகவல்களை பரிமாறிக்கொள்ளும் முறை நடைமுறைக்கு வருவதால் நிதி முறைகேடுகள் மற்றும் வரி ஏய்ப்புகள் அவ்வளவு எளிதில் செய்து விட முடியாது என்கிறார் அருண் ஜேட்லி.

இது குறித்து அவர் புதுடெல்லியில் 'நெட்வொர்க்கிங் த நெட்வொர்க்ஸ்’ என்ற சர்வதேச கருத்தரங்கில் தெரிவிக்கும் போது, “நாடுகளுக்கு இடையே உடனுக்குடன் தகவல் பறிமாறிக் கொள்ளும் முறை இன்னும் ஓரிரு ஆண்டுகளில் நடைமுறைக்கு வருகிறது என்பதால் சட்டத்தை மீறுவர்களுக்கு இனி வரும் காலம் மிக மிகக் கடினமாகிவிடும்.

உலகின் ஒரு சட்ட எல்லையில் சம்பாதித்த லாபங்களை வேறு இடங்களுக்கு சட்ட விரோதமாகக் கொண்டு சென்று எங்கு வருவாய் ஈட்டினார்களோ அப்பகுதியின் மூலதன அடித்தளத்தையே அரிக்கச் செய்யும் போக்கை முறியடிக்க உலக நாடுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன” என்றார்.

ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற ஜி20 நாடுகள் உச்சி மாநாட்டில் 2017-18-ம் ஆண்டுவாக்கில் வரித்தகவல்களை தானாகவே பரிமாறிக் கொள்ளும் புதிய உலக வெளிப்படைத்தன்மைக்கு தலைவர்கள் ஒப்புதல் அளித்தனர்.

இந்த தானியங்கி தகவல் பரிமாற்ற முறையை இந்தியா முன்னதாகவே தன் வசப்படுத்தும் என்று தெரிகிறது.

இதனையடுத்து இந்தியா உட்பட 7 நாடுகள் அங்கம் வகிக்கும் தெற்காசிய மண்டல புலனாய்வு ஒருங்கிணைப்பு மையம் உருவாக்கப்படவுள்ளது. இந்தியா மற்றும் நேபாள், மியான்மர், பூடான், வங்கதேசம், இலங்கை, மாலத்தீவுகள் ஆகிய நாடுகள் இந்த புலனாய்வு ஒருங்கிணைப்பு மையத்தில் அங்கம் வகிக்கும் என்று வருவாய் செயலர் ஹஸ்முக் ஆதியா தெரிவித்தார்.

“இது நடைமுறைக்கு வரும் போது, தெற்காசிய பகுதி மற்ற பிரேதேச மற்றும் உலக நாடுகளுடன் தொடர்பு கொண்டு விரைவில் உலக குற்றங்கள் குறித்த தகவல்கள் பரிமாறிக் கொள்ளப்படவுள்ளது” என்றார் ஹஸ்முக் ஆதியா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x