

அரசியல் சாசனத்தில் கூறியுள்ளபடி, சட்ட நிபுணர் ஒருவர் கூட நீதிபதியாக நியமிக்கப்படவில்லை என்று மத்திய அரசு குற்றம்சாட்டி உள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த தேசிய நீதிபதிகள் நியமனக் குழு சட்டம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் 16-ம் தேதி தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை அளித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.எஸ்.கேஹர், சலமேஸ்வர், மதன் லோக்கூர், குரியன் ஜோசப், ஆதர்ஷ் கோயல் அடங்கிய 5 நீதிபதிகள் அமர்வு, ‘கொலீஜியம்’ முறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
அதன்படி, மூத்த வழக்கறிஞர் கள், சட்ட நிபுணர்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இக்கருத்துக்களை கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல், மூத்த வழக்கறிஞர் அரவிந்த் தத்தார் ஆகியோர் தொகுத்து உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். அதில், நீதிபதிகள் நியமனத்தின் போது, ‘கொலீஜியம்’ கூட்டத்தில் பேசப்படும் விவரங்களை தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கொண்டு வர வேண்டும், இட ஒதுக்கீடு அடிப்படையில் நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல கருத்துகள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
இந்த விஷயத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ள கருத்து வருமாறு:
உயர் நீதிமன்றத்தில் 5 ஆண்டு கள் நீதிபதியாக இருப்பவர், உயர் நீதிமன்றத்தில் 10 ஆண்டுகள் வழக் கறிஞராக இருப்பவர், குடியரசுத் தலைவரால் சட்ட நிபுணர் என்று கருதப்படுவர் என மூன்று பிரிவு களைச் சேர்ந்தவர்களை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க முடியும். ஆனால், ‘சட்ட நிபுணர்’ பிரிவில் இதுவரை ஒருவர்கூட நீதிபதியாக நியமிக்கப்படவில்லை. இது தவறான செயல். அதேசமயம், ‘சட்ட நிபுணர்’ ஒருவரை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க சட்டத்தில் இடமில்லை. நீதித்துறை அதிகாரியாக 10 ஆண்டுகள் பணி யாற்றியவர், உயர் நீதிமன்றத்தில் 10 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றியவர் ஆகியோரை மட்டுமே உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்க முடியும்.
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியை மட்டுமே உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவது நடைமுறையாக இருந்து வருகிறது. உயர் நீதிமன்றத்தில் மூத்த நீதிபதி யாக பணியாற்றி வருபவரைக் கூட நியமிக்கலாம். ‘சட்ட நிபுணர்’ என்ற பிரிவிலும் நீதிபதிகளை நியமிக்க வழிமுறைகளை வகுக்க வேண்டும். ஆண்டுக்கு ஒருமுறை நீதிபதிகள் நியமனம் குறித்த விவரங்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தலாம்.
இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
‘கொலீஜியம்’ முறையை மேம்படுத்துவது குறித்து மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் பொதுமக்களின் கருத்தையும் கோரி வருகிறது. “collegium-improvement@gov.in, collegium-suggestions@gov.in'' ஆகிய இ-மெயில் முகவரி மூலம் நாளை மாலை 5 மணி வரை பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம். இக்கருத்துகள் அனைத்தையும் உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அமர்வு வரும் 18 மற்றும் 19-ம் தேதிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவுள்ளது.