

டெல்லியில் வங்கிப் பணம் ரூ.22.50 கோடியை கடத்திச் சென்ற வேன் டிரைவர் பிரதீப் சுக்லா ஒருநாள் கோடீஸ்வரராக வாழ்ந்துள்ளார்.
மேற்கு டெல்லியின் விகாஸ்புரி யில் உள்ள ஆக்சிஸ் வங்கியில் இருந்து ஏ.டி.எம். மையங்களில் பணம் நிரப்புவதற்காக கடந்த வியாழக்கிழமை ரூ.38 கோடி 4 வேன்களில் எடுத்துச் செல்லப் பட்டது. இதில் ஒரு வேனை டிரைவர் பிரதீப் சுக்லா ஓட்டினார். அவருக்கு பாதுகாவலாக வினய் படேல் உடன் சென்றார். அந்த வேனில் ரூ.22.50 கோடி இருந்தது. ஒஹ்லா என்ற பகுதியில் வேன் சென்றபோது பாதுகாவலர் வினய் படேல் இயற்கை உபாதைக்காக வேனில் இருந்து இறங்கினார்.
இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பிரதீப் சுக்லா வேனுடன் தலைமறைவானார். வினய் படேல் உடனடியாக வங்கி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்துவிட்டு போலீஸிலும் புகார் செய்தார்.
வங்கிப் பணத்துடன் வேனை கடத்திய டிரைவர் பிரதீப் சுக்லா டெல்லி ஒஹ்லா பகுதியில் உள்ள செயல்படாத ஆலைக்குச் சென்றார். அந்த ஆலையின் காவலாளி ராம் சூரத் ஏற்கெனவே பிரதீபுக்கு அறிமுகமானவர். அன்றிரவு அங்கு தங்க காவலாளியிடம் அனுமதி கோரிய பிரதீப், 9 பணப் பெட்டி களை வேனில் இருந்து இறக்க முயன்றார். அவை மிகவும் கனமாக இருந்ததால் மணல் மூட்டைகளை அடுக்கி பணப்பெட்டிகளை இறக்கினார். பின்னர் கோவிந்தபுரி மெட்ரோ ரயில் நிலையம் அருகில் வேனை நிறுத்திவிட்டு ஒஹ்லா ஆலைக்குத் திரும்பினார். அங்கு 3 தொழிலாளர்களை வரவழைத்து இரும்பிலான பணப்பெட்டிகளை உடைக்கச் செய்தார்.
பின்னர் ஓட்டலுக்கு சென்று சிக்கன் வாங்கியுள்ளார். அங்கு ரூ.500 பில்லுக்கு ரூ.2500 கொடுத்துள்ளார். தெருவோரம் தர்மம் எடுப்பவர்களுக்கு ரூ.100 நோட்டுகளை அள்ளி வழங்கியுள்ளார்.
இதனிடையே பிரதீப் சுக்லா குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.2 லட்சம் பரிசுத் தொகை அறிவித்த டெல்லி போலீஸார் அவரை தேடினர். இறுதியில் ஒஹ்லா பகுதியில் பிரதீப் சுக்லா சிக்கிக் கொண்டார். அவர் கடத்திய ரூ.22.50 கோடியில் ரூ.11 ஆயிரம் தவிர மீதமுள்ள தொகை பத்திரமாக மீட்கப்பட்டது.
இதுகுறித்து போலீஸார் கூறிய போது, கைதான டிரைவர் பிரதீப் சுக்லா மிகக் குறைவான ஊதியத் தில் பணியாற்றியுள்ளார், இதுதான் அவரது முதல் குற்றச் செயல், ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப் பட்டு பணத்தை கடத்தியுள்ளார் என்று தெரிவித்தனர்.