

பிஹார் சட்டப்பேரவை தேர்தலின் வெற்றியால் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவரான லாலு பிரசாத் யாதவின் அரசியல் வாழ்க்கைக்கு மறுவாழ்வு கிடைத்திருக்கிறது.
சுமார் இரண்டு வருடங்களுக்கு முன் கால்நடைத் தீவன வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தால் 6 ஆண்டுகள் தண்டணை அடைந்தவருக்கு அரசியல் வாழ்வு அஸ்தமனமாகும் நிலை உருவானது. மூன்று வருடங்களுக்கு மேல் தண்டிக்கப்பட்டதால், தனது மக்களவை உறுப்பினர் பதவியை இழந்தார் லாலு. இத்துடன் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது. தனக்கு பதிலாக மக்களவை தேர்தலில் போட்டியிட வைத்த மகள் மிசா பாரதிக்கும் தோல்வி ஏற்பட்டது. ஆனால், நடந்து முடிந்த பிஹாரின் சட்டப்பேரவை தேர்தல் லாலுவின் அரசியல் வாழ்க்கையை புரட்டிப் போட்டிருக்கிறது.
இதில், லாலுவின் மெகா கூட்டணிக்கு கிடைத்த வெற்றியை பார்க்கும்போது அவரது உழைப்பின் மீது யாராலும் கேள்வி எழுப்ப முடியாது. ஒரு வருடத்திற்கு முன் செய்யப்பட்ட இருதய அறுவை சிகிச்சையுடன், கால்நடைத் தீவன ஊழல் வழக்கில் சிக்கி ஜாமீனில் இருக்கும் கவலைகளையும் மீறி, 67 வயது லாலுவின் அசாதரண உழைப்பு இந்த தேர்தலில் பார்க்க முடிந்தது.
சுமார் 30 நாட்களில் 243 பிரச்சாரக் கூட்டங்களில் பேசினார் லாலு. இதில், மதவாதத்தின் பேரில் பாரதிய ஜனதா பிரிக்க முயன்றதாகக் கருதப்பட்ட பிற்படுத்தப்பட்ட இந்து மற்றும் முஸ்லிம்களின் வாக்குகளை தனது மெகா கூட்டணி உறுப்பினர்களான காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் பக்கம் திருப்பினார்.
இதன் முதல் ஆயுதமாக, ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் தலைவர் மோஹன் பாக்வத் ஒதுக்கீடு பற்றி கூறிய சர்ச்சைக்குரிய கருத்து லாலுவிற்கு அதிக பலன் தந்தது. இதை வைத்து அவர், பாஜக ஆட்சிக்கு வந்தால் சாதி அடிப்படையிலான இடஒதுக்கீடுகள் ரத்தாகி விடும் என மிரட்டியது மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் உட்பட அனைத்து வாக்காளர்களின் கவனத்தை பெரிதும் கவர்ந்தது. இதற்காக அவர், 'யாதவர்களை முட்டாளாக்கப் பார்க்கிறார் மோடி. பிற்படுத்தப்பட்டவர்களும், யாதவர்களும் இந்த லாலுவை கைவிட மாட்டார்கள். தம்மிடம் உள்ள எருமைகளால் யாதவர்களை கீழே இறக்க முடியாத போது மோடியால் மட்டும் எப்படி முடியும்?' என கிண்டலுடன் எழுப்பிய கேள்வி பிஹார்வாசிகளால் மிகவும் ரசிக்கப்பட்டது.
ஒரு மாநில தலைவர்களுக்கு எதிராக தேசிய தலைவரும் பிரதமருமான மோடி செய்தது போல் தீவிர பிரச்சாரம் யாரும் செய்திருக்க முடியாது. இதில் மோடி, நிதிஷைப் பற்றியும், அவரை விட அதிகமாக தனக்கு எதிராகவும் வைத்த கடுமையான விமர்சனங்களுக்கு லாலு தனது நகைச்சுவை பாணியில் அளித்த பதில்கள், மெகா கூட்டணிக்கு வலு சேர்த்தது.
பாஜக பெயரில் பாரதத்தை நடத்துவதாகக் கூறும் இந்த கட்சி, தம் ஆட்சியை வெறும் வார்த்தைகள் பேசி நடத்துகிறது எனப் புகார் வைத்ததுடன் லாலு, 'க்யா ஹுவா தேரா வாதா… (நீங்கள் கொடுத்த வாக்கு என்னவானது) என அமிதாப் பச்சன் நடித்த பாலிவுட் படத்தின் பிரபல பாடலை பாடியும் காட்டினார். மந்திரவாதியுடனான நிதிஷின் சந்திப்பில் வெளியான வீடியோவை விமர்சித்த மோடிக்கு பதிலாக லாலு, 'நான் தான் பெரிய மந்திரவாதி! நிதிஷ் மெகா கூட்டணியின் மாப்பிள்ளை! மாப்பிள்ளை இல்லாமல் ஊர்வலமா?' என லாலு அடித்த கிண்டல் அவருக்கு பிஹார்வாசிகளிடம் பலத்த கைதட்டல்களை பெற்றுத் தந்தது.
மக்களவை தேர்தலில் நிதிஷ் குமாருக்கும் ஏற்பட்ட தோல்வியால் பிஹாரில் பாஜக நுழையும் வாய்ப்பு நிலவியது. இவர்களை வெளி மாநிலத்தவர்கள் எனக் குறிப்பிட்ட லாலு, 'பாஜகவை ஆட்சிக்கு வர விடாமல் தடுக்க நான் விஷத்தையும் விழுங்குவேன்!' எனக் கூறி தன் முக்கிய எதிர்கட்சியாக இருந்த நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துடன் கைகோர்த்தார். லாலுவின் இந்த முக்கிய அரசியல் முடிவு அவருக்கு வெற்றியுடன், மறுவாழ்வையும் அளித்துள்ளது. இதன் பலனாக முதல் முறையாக தேர்தலில் போட்டியிடும் தன் இரு மகன்களை அமைச்சராக்கும் வாய்பையும் பெற்று விட்டார் லாலு. பிஹாரின் மேலவை அல்லது நாடாளுமன்ற மக்களவை வழியாக தன் மகள் மிசா பாரதியை தேசிய அரசியல் களத்தில் இறக்கி விடுவார். இதன்மூலம் தற்போதைய பல பழுத்த அரசியல்வாதிகள் செயல்பாடுகளில் லாலுவும் இடம் பெற்று விட்டார்.
லாலுவின் இந்த முயற்சி ஆச்சரியமாகப் பார்க்கப்பட்டாலும் அது, நம் ஜனநாயக நாட்டின் தவறான முன்னுதாரணம் என்ற கருத்தும் நிலவுகிறது. லாலு 10 வருடங்களுக்கு முன் 15 வருடம் பிஹாரில் நடத்தியக் காட்டுத் தர்பாரை, அம்மாநில இளைய தலைமுறையினர் மறந்துவிட்டதும், மூத்தவர்கள் இன்னும் சாதி - மத அரசியலில் இருந்து வெளியேறாமல் இருப்பதும் முக்கியக் காரணம் ஆகும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.
ஊழல் விவகாரத்தால் பிஹாருக்கு தேச அளவிலும், உலக அளவிலும் களங்கம் ஏற்படுத்தியவர் என்ற பேச்சு இருந்தாலும், ரயில்வே அமைச்சராக இருந்தபோது தனது செயல்பாடுகள் மூலம் நற்பெயரை ஈட்டித் தந்தவர் என்ற எண்ணமும் பிஹார் மக்களிடையே இருக்கிறதும் என்றும் ஒரு தரப்பினர் சொல்கின்றனர். குறிப்பாக, தங்கள் அன்றாட வாழ்வாதாரத்துக்கு உறுதிபூணும் அரசைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற காரணமே, பிஹார் மக்கள் பார்வையில் ஊழல் என்ற கறை கரைந்து போய்விடச் செய்துள்ளது என்ற வாதத்தையும் தவிர்க்க முடியவில்லை.