வேளாண் சட்டங்களை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நால்வர் குழு: உச்ச நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நால்வர் குழுவினர் தங்களின் அறிக்கையை சீல் வைத்த கவரில் வைத்துக் கடந்த 19-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் கிளர்ந்தெழுந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளின் போராட்டம் 5-வது மாதத்தை எட்டியுள்ளது. மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் பிறப்பித்த உத்தரவில், வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்த மத்திய அரசுக்குத் தடை விதித்தது.

வேளாண் சட்டங்கள் குறித்த கவலைகள், பிரச்சினைகள் குறித்துத் தெரிவிக்கவும், சிக்கல்களைக் களையவும் 4 பேர் கொண்ட குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்திருந்தது. அந்தக் குழுவில், “பாரதிய கிசான் யூனியன் தேசிய தலைவர் பூபேந்தர் சிங் மான், ஷேத்கேரி சங்காதனா (மகாராஷ்டிரா) தலைவர் அனில் கான்வாட், சர்வதேச உணவுக் கொள்கை ஆய்வு மையத்தின் தெற்காசிய இயக்குநர் பிரமோத் குமார் மிஸ்ரா, வேளாண் பொருளாதார வல்லுநர் அசோக் குலாட்டி” ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். ஆனால், ஆய்வுக் குழுவில் இருந்து பாரதிய கிசான் யூனியன் தேசிய தலைவர் பூபேந்திர சிங் மான் விலகினார்.

வேளாண் சட்டங்கள் குறித்து ஆய்வு செய்து, அனைத்துத் தரப்பினருடன் ஆலோசித்து, 2 மாதத்துக்குள் அறிக்கை அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் ஆய்வுக் குழுவினர் தங்கள் அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

இதுகுறித்து ஆய்வுக்குழுவில் உள்ள உறுப்பினர் பி.கே.மிஸ்ரா பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், "3 வேளாண் சட்டங்களையும் ஆய்வு செய்து, அனைத்துத் தரப்பினரிடமும் கருத்துகளைக் கேட்டு எங்கள் அறிக்கையைக் கடந்த 19-ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் சீல் வைக்கப்பட்ட கவரில் தாக்கல் செய்துவிட்டோம்" எனத் தெரிவித்தார்.

இந்த சமரசக் குழுவின் இணையதளத்தில், ''இதுவரை 12 சுற்றுப் பேச்சுவார்த்தை பல்வேறு தரப்பினருடன் நடத்தப்பட்டுள்ளது. விவசாயிகள், வேளாண் உற்பத்தியாளர் அமைப்புகள், வேளாண் பொருட்கள் கொள்முதல் அமைப்புகள், கல்வியாளர்கள், தனியார் மற்றும் அரசு வேளாண் பொருட்கள் கொள்முதல் அமைப்புகள் ஆகியவற்றுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

மேலும், இந்த அறிக்கையைத் தாக்கல் செய்யும் முன்பாக, 9 முறை இந்தக் குழுவினர் கூட்டம் நடத்தி ஆலோசித்த பின்புதான் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in