Last Updated : 31 Mar, 2021 01:45 PM

 

Published : 31 Mar 2021 01:45 PM
Last Updated : 31 Mar 2021 01:45 PM

வெளிமாநில குண்டர்கள் நந்திகிராமில் நுழைந்துவிட்டார்கள்: தேர்தல் ஆணையத்துக்கு மம்தா வலியுறுத்தல்

நந்திகிராம் தொகுதியில் போட்டியிடும் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி: படம் | ஏஎன்ஐ.

நந்திகிராம்

நந்திகிராம் தொகுதிக்குள் வெளிமாநிலங்களைச் சேர்ந்த குண்டர்கள் நுழைந்துவிட்டார்கள். தேர்தல் ஆணையம் விரைந்து நடவடிக்கை எடுத்து அவர்களை வெளியேற்ற வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. இதில் முதல்கட்டத் தேர்தல் கடந்த 27-ம் தேதி 30 தொகுதிகளுக்கு நடந்த முடிந்த நிலையில் 2-வது கட்ட வாக்குப்பதிவு நாளை நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையோடு முடிந்துவிட்டது.

2-வது கட்டத் தேர்தலில் மிகவும் எதிர்பார்ப்பாக இருப்பது நந்திகிராம் தொகுதியாகும். நந்திகிராம் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியை எதிர்த்து பாஜக சார்பில் சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார். இருவருக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் பேசும்போது, "பாஜகவினர் பண மதிப்பிழப்பில் கணக்கில் வராத பணம், பிஎம் கேர்ஸ் நிதி ஆகியவற்றை நந்திகிராம் தொகுதியில் பயன்படுத்துகிறார்கள். பாதுகாப்பு வாகனங்களில்தான் பணம் கொண்டு செல்லப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது" எனக் குற்றம் சாட்டியிருந்தார்.

மூன்றாம் கட்டத் தேர்தல் பிரச்சாரத்துக்கு இன்று காலை புறப்படும் முன் முதல்வர் மம்தா பானர்ஜி நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ''நந்திகிராம் தொகுதிக்குள் வெளிமாநிலங்களைச் சேர்ந்த குண்டர்கள் நுழைந்துவிட்டார்கள் என்ற தகவல் எங்களுக்குக் கிடைத்துள்ளது. இந்த குண்டர்கள் வாக்காளர்களுக்கு மிரட்டல் விடுக்கலாம், வாக்களிப்பதில் இடையூறும் விளைவிக்கலாம். ஆதலால், தேர்தல் ஆணையம் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புர்பா மெதினாப்பூர் மாவட்டத்தில் உள்ள ஏராளமான கிராமங்களில் மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகின்றனர். பல்ராம்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களிலும் மக்கள் வலுக்கட்டாயமாக குண்டர்களால் வெளியேற்றப்படுகிறார்கள். மக்களுக்கு மிரட்டல் விடுக்கிறார்கள்.

இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளோம். இதைத் தீவிரமாகக் கருதித் தேர்தல் ஆணையம் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

பாஜக தலைவர் ஜெய்பிரகாஷ் மஜூம்தார் நிருபர்களிடம் கூறுகையில், "திரிணமூல் காங்கிரஸ் கூறும் குற்றச்சாட்டுகளைத் தேர்தல் ஆணையம்தான் ஆய்வு செய்ய வேண்டும். தோற்றுவிடுவோம் என்ற அச்சத்தில் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை முன்கூட்டியே மம்தா வைக்கிறார்" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x