மியான்மர் அகதிகளை அனுமதிக்க வேண்டாம் என்ற உத்தரவை 3 நாளில் திரும்பப் பெற்ற மணிப்பூர் அரசு

மியான்மர் அகதிகளை அனுமதிக்க வேண்டாம் என்ற உத்தரவை 3 நாளில் திரும்பப் பெற்ற மணிப்பூர் அரசு
Updated on
1 min read

மியான்மரிலிருந்து வரும் அகதிகளை அனுமதிக்க வேண்டாம் என்ற உத்தரவை மணிப்பூர் அரசு 3 நாளில் திரும்பப் பெற்றுள்ளது.

மியான்மரில் ராணுவப் புரட்சிக்கு எதிராக போராடும் மக்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் நூற்றுக் கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். பலர் அங்கிருந்து வெளியேறி இந்தியாவின் மிசோரம், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில், மணிப்பூர் மாநிலத்தில் எல்லையோரம் உள்ளசந்தல், தெங்குபால், காம்ஜோங், உக்ருல் மற்றும் சுரசந்த்பூர் ஆகியமாவட்ட துணை ஆணையர்களுக்கு, மாநில சிறப்பு செயலாளர் (உள் துறை) எச்.கியான் பிரகாஷ் கடந்த 26-ம் தேதி ஒரு சுற்றறிக்கை அனுப்பினார். அதில்,“மியான்மரில் நடைபெறும் கலவரம் காரணமாக, அந்நாட்டைச் சேர்ந்தவர்கள் மணிப்பூர் உள்ளிட்ட இந்திய மாநிலங்களில் நுழைய முயற்சிப்பதாக தகவல் கிடைத்துள்ளது. எனவே, அப்படிவருவோர் தங்கவும் உணவுப்பொருள் வழங்கவும் முகாம்களை அமைக்க மாவட்ட நிர்வாகம் முன்வரக்கூடாது. தொண்டுநிறுவனங்களும் இதுபோன்ற செயலில் ஈடுபடுவதை அனுமதிக்கக் கூடாது. அகதிகளைதிருப்பி அனுப்ப வேண்டும். அதேநேரம் காயமடைந்தவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் மருத்துவ உதவிகளை செய்யலாம்” என கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, மியான்மர் அகதிகளை அனுமதிக்க வேண்டாம்என மிசோரம் மாநில அரசுக்கு மத்திய அரசு கடந்த 10-ம் தேதி உத்தரவிட்டது. இதற்கு அம்மாநில பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுபோன்ற எதிர்ப்பை தவிர்ப்பதற்காக, மணிப்பூர் மாநில அரசு நேற்று முன்தினம் மற்றொரு சுற்றறிக்கையை அனுப்பிஉள்ளது.

அதில், “முந்தைய சுற்றறிக்கையில் இடம்பெற்றிருந்த தகவல்தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. மியான்மரிலிருந்து வரும்அகதிகள் அனுமதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் தேவையான உதவிகள் செய்யப்படுகின்றன. எனவே, முந்தைய சுற்றறிக்கை திருப்பப் பெறப்படுகிறது” என கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா பிரதமர் மோடிக்கு சமீபத்தில் ஒரு கடிதம் எழுதினார். மியான்மர் ராணுவம் அப்பாவி மக்களை கொல்கிறது. அங்கிருந்து வரும் அகதிகளுக்கு அடைக்கலம் தர வேண்டியது நமது கடமை என அந்தக் கடிதத்தில் வலியுறுத்தி இருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in