Published : 31 Mar 2021 03:15 AM
Last Updated : 31 Mar 2021 03:15 AM

திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் செலுத்திய ரூ.2 கோடி மதிப்புள்ள காணிக்கை தலைமுடி கடத்தல்: சீன எல்லையில் மீட்பு

திருப்பதி ஏழுமலையானுக்கு நேர்த்திக் கடனாக தலைமுடியை பக்தர்கள் செலுத்தி வருகின்றனர். இவ்வாறு தலைமுடி காணிக்கை செலுத்தப்பட்ட பின்னர், அவை தரம் பிரிக்கப்படும். 25 முதல் 27 அங்குல நீளம் உள்ள தலைமுடி முதல் வகையை சேர்ந்தது. அதன் பின்னர், 18 முதல் 24 அங்குலம் தலைமுடி 2ம் வகையை சேர்ந்தது. இப்படியாக காணிக்கை தலைமுடிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, அவை நன்றாக அலசி, உலர வைத்து, அதன் பின்னர் அவை சுத்தப்படுத்தி பாதுகாக்கப்படுகிறது.

இந்த தலைமுடிகள் 3 மாதங் களுக்கு ஒருமுறை இ-டெண்டர் மூலம் ஏலம் விடப்படுகிறது. இவற்றை ஏலம் எடுக்க வெளி நாட்டவர் மிகுந்த ஆர்வம் காட்டு கின்றனர். இதற்காகவே ஒரு கும்பல் அவர்களாகவே ஒரு வட்டம் அமைத்துக் கொண்டு ஏலத்தில் பங்கேற்பதாகவும் குற்றச்சாட்டுகள் நிலவுகின்றன. ஆதலால், ஒரு சிலர் மட்டுமே ஏலத்தில் பங்கேற்று அவர்கள் கூறும் விலைக்கு தலைமுடி ஏலம் விடப்படுகிறது. இவை சீனா, இலங்கை, தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப் படுகிறது.

கடந்த 10 நாட்களுக்கு முன்னர் மிசோரம் அருகே சீன எல்லையில் வாகனங்களை அசாம் ஆயுதப் படையினர் தணிக்கை செய்தனர். அப்போது, ஒரு சரக்கு லாரியில் 120 தலைமுடி மூட்டைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து விசாரணை நடத்திய தில், இவை அனைத்தும் திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கியவை என தெரியவந்தது. ஆனால், இவை ஏன் வெளிநாட்டுக்கு கடத்தப்பட வேண்டும் ? இதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் ? என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக தெலுங்கு தேசம் கட்சியின் மூத்த நிர்வாகியான அய்யண்ண பாத்ருடு, முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை சமூக வலைதளத்தில் விமர்சித்துள்ளார். ‘கடைசியில் ஏழுமலையானுக்கு பக்தர்கள் கொடுத்த காணிக்கை முடிகளை கூட ஜெகன் கட்சியினர் விட்டு வைக்கவில்லை’ என அவர் விமர்சித்துள்ளார்.

தேவஸ்தானம் விளக்கம்

திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறப்பட்டுள்ளதாவது:

பல கோயில்களை போன்றே திருப்பதி தேவஸ்தானமும் பக்தர்களின் காணிக்கை தலைமுடியை இ-ஏலம் மூலம் வெளி நாட்டவர்களுக்கு விற்பனை செய்து வருகிறது. ஆனால், இவை சீன எல்லையில் கடத்தப்படும்போது பிடிபட்டது என செய்திகள் வெளி வருகின்றன. இதற்கும், தேவஸ்தானத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. எந்த நிறுவனம் இது போன்ற செயலை செய்தார்கள் எனும் விவரத்தை வெளியிட்டால் அந்த நிறுவனத்தார் இனி இ-ஏலத்தில் பங்கேற்காதவாறு நடவடிக்கை எடுப்போம் என அதில் தேவஸ்தானம் கூறியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x