

மேற்கு வங்க தேர்தல் வெற்றியில் அம்மாநில தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் தவிர்க்க முடியாதவர்களாக உள்ளனர். கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக பக்கம் சாய்ந்த இவர்களை தம்முடன் தக்கவைக்க திரிணமூல் காங்கிரஸ் தீவிரம் காட்டுகிறது.
எட்டு கட்டங்களாக தேர்தலை சந்திக்கும் மேற்கு வங்கத்தின் வட பகுதியில் 8 மாவட்டங்கள் உள்ளன. இங்குள்ள 54 சட்டப்பேரவை தொகுதிகளில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் சுமார் 8 லட்சம் பேர் வசிக்கின்றனர். மேலும் பழங்குடியின தொழிலாளர்களும், குர்கா இன மக்களும் கணிசமாக உள்ளனர். இவர்களின் வாக்கு வட மாவட்டங்களில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
மேற்கு வங்கத்தில் கடந்த 2011 சட்டப்பேரவை தேர்தலில் மம்தா பானர்ஜி அலை வீசியபோதும் அவரது திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு இப்பகுதியில் 16 தொகுதிகள் மட்டுமே கிடைத்தது. அடுத்து 2016-ல் சற்று அதிகமாக 26 தொகுதிகள் மம்தா கட்சிக்கு கிடைத்தன. மற்ற தொகுதிகளை இரண்டு தேர்தல்களிலிலும் இடதுசாரிகளும் காங்கிரஸும் பகிர்ந்து கொண்டன.
இதனால் இம்முறை இவர்களின் வாக்கு யாருக்கு கிடைக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இப்பகுதியில் உள்ள 8 மக்களவைத் தொகுதிகளில் கடந்த மக்களவைத் தேர்தலில் 7-ல் பாஜக வென்றது. எனவே இம்முறை அதன் பெரும்பாலான சட்டப்பேரவை தொகுதிகளும் தங்களுக்கே கிடைக்கும் என பாஜக நம்பியுள்ளது. பாஜகவிடமிருந்து தொகுதிகளை முழுமையாக பறிக்க முடியாவிட்டாலும் கடந்தமுறை பெற்ற வெற்றியை இம்முறை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என முதல்வர் மம்தா தீவிரம் காட்டுகிறார்.
கடந்த மக்களவைத் தேர்தலில் இங்குள்ள 7 தொகுதிகள் பாஜகவிடம் சென்ற பிறகே வடக்கு பகுதியில் முதல்வர் மம்தா கவனம் செலுத்தத் தொடங்கினார். புதிய மருத்துவக் கல்லூரி உட்பட பல்வேறு திட்டங்களை அமல்படுத்தினார். மாநில அரசின் நிதியுதவியுடன் தொழிலாளர்களின் குடிசைகளை கான்கிரீட் வீடுகளாக மாற்றும் திட்டத்தையும் அறிவித்தார். இது முழுமையாக அமலாவதற்குள் தேர்தல் அறிவிப்பு வெளியாகி விட்டது. மேலும் திரிணமூல் காங்கிரஸின் முக்கியத் தலைவர்கள் பலர் பாஜகவுக்கு தாவியதும் அக்கட்சிக்கு சறுக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இதேபோல் பாஜகவும் இப்பகுதி மக்களின் வாக்குகளை கவர மத்திய அரசின் பல திட்டங்களை அறிவித்தது. இந்தமுறை பட்ஜெட்டில் நாடு முழுவதிலும் உள்ள தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் நலனுக்காக ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கியது. இது மேற்கு வங்கத்தின் வடக்கு பகுதி தொழிலாளர்களுக்கும் பலன் தரக் கூடியது. இப்பகுதியின் கோச் அரச வம்சத்தை சேர்ந்த ஆனந்த் ராயை மத்திய அமைச்சர் அமித்ஷா சமீபத்தில் சந்தித்து பேசியது முக்கியத்துவம் பெற்றது. இதுபோன்ற காரணங்களால் இப்பகுதியில் தங்களுக்கு 42 முதல் 45 தொகுதிகள் வரை கிடைக்கும் என பாஜக நம்புகிறது.
ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன் கோச் வம்சத்தினர் ஆண்ட இப்பகுதியை தனிமாநிலமாக்க பல ஆண்டுகளாக கோரப்பட்டு வருகிறது. ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பாகவும் எழும் இக்கோரிக்கையை எந்த அரசியல் கட்சியும் கண்டுகொள்ள வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.