

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மத்திய செய்தி மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் மணீஷ் திவாரி (48) வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடமாட்டார் என தகவல்கள் கூறுகின்றன.
பஞ்சாப் மாநிலம் லூதியானா மக்களவைத் தொகுதி எம்.பி.யான திவாரி, இதய நோய் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் தெற்கு டெல்லியில் உள்ள மேக்ஸ் மருத்துவமனையில் சனிக்கிழமை சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
வரும் தேர்தலில் சண்டீகர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட திவாரி விரும்பியதாக தகவல் வெளியானது. ஆனால் அந்தத் தொகுதியில் இப்போதைய எம்.பி.யான முன்னாள் அமைச்சர் பவன் குமார் பன்சாலுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
எனினும், லூதியானா தொகுதிக்கு இன்னும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படவில்லை. திவாரியே மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்படக்கூடும் என கூறப்பட்டது. ஓரிரு நாட்களில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.