

மியான்மரில் ஏற்பட்டுள்ள ராணுவப் புரட்சிக்கு அஞ்சி, இந்திய எல்லையைக் கடந்து தஞ்சமடையும் மியான்மர் மக்களுக்கு அடைக்கலம் அளிக்காமல், தேவையான உதவிகளை வழங்கி மீண்டும் அனுப்ப வேண்டும் என்று கடந்த வாரம் அதிகாரிகளுக்கு அனுப்பிய கடிதத்தை மணிப்பூர் அரசு திரும்பப் பெற்றுள்ளது.
மியான்மரில் ராணுவப் புரட்சி ஏற்பட்டு கடந்த பிப்ரவரி 1-ம் தேதி ஆட்சியைக் கைப்பற்றியது. ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராடி வரும் நிலையில் அவர்களை ராணுவமும், போலீஸாரும் கொன்று குவித்து வருகின்றனர். இதனால் உயிருக்கு பயந்து மியான்மர் மக்கள் எல்லை வழியாக இந்தியாவுக்குள் வருவது அதிகரித்து வருகிறது.
மியான்மரிலிருந்து வரும் அகதிகளை அடையாளம் கண்டு அவர்களைத் திருப்பி அனுப்ப வேண்டுமென்று மத்திய உள்துறை அமைச்சகம், வடகிழக்கு மாநிலங்களுக்கு அறிவுறுத்தி இருந்தது. ஆனால், இந்த முடிவை அமல்படுத்த முடியாது என மணிப்பூர் அரசு முடிவு எடுத்துள்ளது.
மிசோரம் மாநில முதல்வர் சோரம் தங்கா, மியான்மர் அகதிகளைத் திருப்பி அனுப்ப முடியாது. மனிதாபிமான உதவிகளை வழங்கிட வேண்டும் என்று பிரதமர் மோடிக்குக் கடந்த வாரம் கடிதம் எழுதியுள்ளார். மேலும், மியான்மர் அகதிகளுக்கு மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை வழங்கவும் மிசோரம் அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், மணிப்பூர் அரசின் உள்துறைச் செயலாளர் ஞானபிரகாஷ் அதிகாரிகளுக்கு அனுப்பிய கடிதத்தில், "கடந்த 26-ம் தேதி அதிகாரிகளுக்கு அனுப்பிய கடிதம் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தைத் திரும்பப் பெறுகிறோம். மியான்மரிலிருந்து வரும் அகதிகளுக்குத் தேவையான மனிதேய உதவிகள் செய்யப்படும். காயமடைந்து வரும் மியான்மர் மக்களுக்கு மருத்துவ சிகிச்சையும் வழங்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த 26-ம் தேதி மணிப்பூரில் உள்ள எல்லையோர மாவட்ட உதவி ஆணையர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், "மியான்மர் அகதிகளுக்கு மனிதநேய உதவிகளை மட்டும் வழங்கிடுங்கள். அவர்களுக்கு ஆதார் எண் பதிவு செய்வதை நிறுத்துங்கள். குழந்தைகளைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தலையும் நிறுத்த வேண்டும்" எனத் தெரிவித்திருந்தது.
இதற்கு ஊடகங்களிலும், மக்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியதையடுத்து, அந்த உத்தரவை மணிப்பூர் அரசு திரும்பப் பெற்றுள்ளது. மியான்மரில் வரும் வரும் மக்களுக்கு அடைக்கலம் கொடுத்து மனிதநேய உதவிகளை மணிப்பூர் அரசு செய்ய உள்ளதாக மாநில அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மிசோ தேசிய முன்னணி கட்சியின் மாநிலங்களவை எம்.பி. எம்.வன்லாவேனா 'தி இந்து'விடம் (ஆங்கிலம்) கூறுகையில், "மியான்மரில் சூழல் முன்னேற்றம் ஏற்படும்வரை அகதிகள் இங்கு தங்கவைக்கப்படுவார்கள். இதுவரை ஆயிரம் அகதிகள் வந்துள்ளார்கள்.
அவர்களுக்கு வாழ வழிசெய்யும் வகையில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் வேலை வழங்கவும் ஆலோசித்து வருகிறோம். அவர்கள் பணமில்லாமல் வாழ முடியாது என்பதால் இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது. மியான்மரிலிருந்து வரும் மக்களுக்கு நிவாரணமாக முதல்வர் நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் சோரம் தங்கா தெரிவித்துள்ளார்.
தன்னார்வக் குழுக்கள் உள்ளூர் சேனல்கள் உதவியுடன் இதுவரை மியான்மர் மக்களுக்கு உதவ ரூ.16 லட்சம் திரட்டியுள்ளனர். இந்தியா நல்ல தேசம். அவர்களைக் கைவிட முடியாது. மீண்டும் அவர்கள் மியான்மர் சென்றால் கொல்லப்படுவார்கள்" எனத் தெரிவித்தார்.