Last Updated : 30 Mar, 2021 07:47 PM

 

Published : 30 Mar 2021 07:47 PM
Last Updated : 30 Mar 2021 07:47 PM

ஆர்டிபிஆர் பரிசோதனையை அதிகப்படுத்துங்கள்; கரோனா தொற்றுள்ளவர்களைத் தனிமைப்படுத்துவதில்லை: மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வேதனை

மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் அசோக் பூஷான்: படம் |ஏஎன்ஐ.

புதுடெல்லி

கரோனாவில் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தும் நடவடிக்கையைப் பெரும்பாலான மாநிலங்கள் செய்வதில்லை. தனிமைப்படுத்துதலைக் கண்காணிக்க வேண்டும். இல்லாவிட்டால், தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கண்காணிக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 56,211 பேர் கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 271 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக கரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.20 கோடிக்கும் மேல் அதிகரித்துள்ளது. 5.40 லட்சம் பேர் சிகிச்சையில் உள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 1.62 லட்சத்தைக் கடந்துள்ளது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத் துறைச் செயலாளர் ராஜேஷ் பூஷான் இன்று டெல்லியில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

''நாட்டில் கரோனா பாதிப்புகளில் பெரும்பாலானவை 10 மாவட்டங்களில்தான் அதிகமாக இருக்கிறது. மகாராஷ்டிராவில் உள்ள புனே, மும்பை, நாக்பூர், தானே, நாஷிக், அவுரங்காபாத், பெங்களூரு நகர்ப்புறம், நான்தெத், டெல்லி, அகமது நகர் ஆகிய நகரங்களில் கரோனா பரவல் அதிகரித்துள்ளது.

பிரிட்டனைச் சேர்ந்து மரபணு மாறிய கரோனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 807 ஆகவும், தென் ஆப்பிரிக்கவைச் சேர்ந்த உருமாறிய கரோனா வைரஸ் 47 பேருக்கும் இருக்கிறது. பிரேசிலைச் சேர்ந்த உருமாறிய கரோனா வைரஸ் ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது.

நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 94 சதவீதமாக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு 1.34 சதவீதமாக இருக்கிறது. வார அளவில் கரோனாவில் பாதிக்கப்படும் தேசிய சராசரி 5.65 ஆகவும், மகாரஷ்டிராவில் 23 சதவீதமாகவும், மத்தியப் பிரதேசத்தில் 7.82 சதவீதமாகவும், சத்தீஸ்கரில் 8 சதவீதமாகவும், கர்நாடகாவில் 5.65 சதவீதமாகவும், தமிழகத்தில் 2.50 சதவீதமாகவும், கர்நாடகாவில் 2.45 சதவீதமாகவும் இருக்கிறது. குஜராத்தில் 2.2 சதவீதம், டெல்லியில் 2.04 சதவீதமாக இருக்கிறது.

கரோனாவில் பாதிக்கப்பட்டவர்களை வீட்டில் தனிமைப்படுத்த வேண்டியது அவசியம். வீட்டில் தனிமைப்படுத்த முடியாவிட்டால், அரசு சார்பில் தனிமை முகாம்களில் வைக்க வேண்டும். ஆனால், கரோனாவில் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்துதல் என்பது பெரும்பாலான மாநிலங்களில் நடக்கவில்லை.

தொற்றுக்கு ஆளானவர்களை வீட்டில் தனிமைப்படுத்த அறிவுறுத்த வேண்டும். அவர்களைக் கண்காணிக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ளாமல் இருந்தால், அவர்களை அரசு கண்காணிப்பில் வைக்க வேண்டும்.

கரோனாவில் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களை 72 மணி நேரம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் மட்டுமின்றி, மற்றவர்களும் தொடர்பில் இருந்தாலும் அவர்களையும் கண்காணிக்க வேண்டும்.

ஆர்டி-பிசிஆர் பரிசோதனையை மாநில அரசுகள் அதிகப்படுத்த வேண்டும், மக்கள்தொகை அதிகரிக்கும் இடங்களில் ஆன்டிஜென் பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும்.

நாங்கள் பல மாநிலங்களின் பிரதிநிதிகளுடன் பேசினோம். கரோனா பாதிப்புகள் அதிகரித்துவரும்போது, ஏன் பரிசோதனையை அதிகப்படுத்தவில்லை என்று கேட்டோம். ஆர்டி-பிசிஆர் பரிசோதனையின் மீது கவனம் செலுத்துங்கள் என்று தெரிவித்துள்ளோம்''.

இவ்வாறு அசோக் பூஷான் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x