விமான நிலையங்களில் முகக்கவசத்தை முறையாக அணியாத பயணிகளுக்கும் அபராதம்: டிஜிசிஏ உத்தரவு

படம் | ஏஎன்ஐ.
படம் | ஏஎன்ஐ.
Updated on
2 min read

விமான நிலையத்தில் பயணிகள் முகக்கவசம் அணியாமல் இருந்தாலும், சமூக விலகலைக் கடைப்பிடிக்காமல் இருந்தாலும், முகக்கவசத்தை முறையாக அணியாமல் வாய்ப்பகுதி வரை அணிந்திருந்தாலும் அபராதம் விதிக்க வேண்டும் என்று விமான நிலையங்களுக்கு விமான நிலைய ஒழுங்குமுறை கட்டுப்பாட்டு அமைப்பு (டிஜிசிஏ) உத்தரவிட்டுள்ளது.

நாட்டில் கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதையடுத்து, அதைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் டிஜிசிஏ இறங்கியுள்ளது.

அது மட்டுமல்லாமல் போலீஸாரின் துணையுடன் விமான நிலையங்களில் கண்காணிப்பை அதிகப்படுத்தி, முகக்கவசத்தைச் சரியாக அணியாத பயணிகளுக்கு ஸ்பாட் ஃபைன் விதிக்கவும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கடந்த 13-ம் தேதி விமான நிறுவனங்கள், விமான நிலையங்களுக்கு டிஜிசிஏ பிறப்பித்த உத்தரவில், " பயணிகள் முகக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்க வேண்டும். சமூக விலகலைக் கடைப்பிடிக்க வலியுறுத்த வேண்டும். அவ்வாறு செய்யாத பயணிகள், மறுக்கும் பயணிகளை விமானத்தில் பறக்கத் தடை விதிக்கும் பட்டியலில் சேர்க்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக டிஜிசிஏ இன்று வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

''பல்வேறு விமான நிலையங்களை ஆய்வு செய்தபோது, கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைச் சரியாகப் பின்பற்றவில்லை என்பது தெரியவந்தது. ஆதலால், அனைத்துப் பயணிகளும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை விமான நிலையங்கள், விமான நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.

முகக்கவசத்தை முறையாக மூக்கையும், வாய்ப் பகுதியையும் அணிவதையும் உறுதி செய்ய வேண்டும். சமூக விலகலைக் கடைப்பிடித்து நடப்பதைக் கண்காணிக்க வேண்டும். கண்காணிப்பை அதிகப்படுத்த வேண்டும்.

முகக்கவசம் அணியாத பயணிகள், முகக்கவசத்தை முறையாக அணியாத பயணிகளிடம் போலீஸார் உதவியுடன், விமான நிலைய அதிகாரிகள் ஸ்பாட் ஃபைன் வசூலிக்கலாம்".

இவ்வாறு டிஜிசிஏ தெரிவித்துள்ளது.

விமான நிலைய அதிகாரிகள், விமான நிறுவனங்கள் கூறும் கரோனா தடுப்பு வழிகாட்டல்களை முறையாகப் பின்பற்றாத பயணிகளைப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் ஒப்படைக்கலாம் என்றும் டிஜிசிஏ முன்பே தெரிவித்திருந்தது.

மேலும், அவ்வாறு விதிமுறைகளை மீறும் பயணிகளுக்கு 3 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை விமானத்தில் பறக்கத் தடை விதிக்கலாம் என்று உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in