

பிஎம் கேர்ஸ் நிதி, பணமதிப்பிழப்புப் பணம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்த பணம் ஆகியவைதான் தேர்தலில் மக்கள் வாக்களிக்க வைக்க வழங்கப்படுகிறது. பாதுகாப்புத்துறை வாகனங்கள் மூலம் பணம் விநியோகம் செய்யப்படுகிறது என்று பாஜக மீது மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. இதில் முதல்கட்டத் தேர்தல் கடந்த 27ம் தேதி 30 தொகுதிகளுக்கு நடந்த முடிந்த நிலையில் 2-வது கட்ட வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 1ம் தேதி நடக்கிறது.
நந்திகிராம் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜியை எதிர்த்து பாஜக சார்பில் சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார். இருவருக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று மாலையுடன் பிரச்சாரம் ஓய்ந்துவிட்டது என்பதால், திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி சக்கரநாற்காலியில் அமர்ந்து கொண்டே நந்திகிராமில் இன்று பாதயாத்திரை சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். சோனாச்சுரா பகுதியில் மம்தா பானர்ஜி தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசியதாவது:
இந்தத் தேர்தலில் மக்களிடம் வாக்குகளைப் பெற வேண்டும் என்பதற்காக மிகப்பெரிய அளவில் பணத்தை பாஜகவினர் பயன்படுத்துகிறார்கள். இதற்காக நாடுமுழுவதிலிருந்தும் பணத்தை மேற்கு வங்கத்துக்குக் கொண்டு வந்துள்ளார்கள். இந்தப் பணத்தை ஹோட்டலில் வைத்துக்கொண்டு, மக்களுக்கு வழங்கி வாக்குக் கேட்கிறார்கள்.
பாதுகாப்புத்துறையின் வாகனங்கள் மூலம்தான் பணம் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட்டு மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. பிஎம் கேர்ஸ் நிதி, பணமதிப்பிழப்பில் வந்த கணக்கில் வராத பணம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை செய்த பணம் ஆகியவை இங்கு புழங்குகிறது.
மக்களின் பணத்தைக் கொள்ளையடித்து, ஒவ்வொரு வாக்காளருக்கு ரூ.500 முதல் ரூ.1000 முதல் பாஜகவினர் வழங்குகிறார்கள். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கும் தெரிவித்துவிட்டோம், ஆனால் நடவடிக்கைதான் எடுக்கவில்லை.
பாஜக ஆளும் மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான அமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள் இந்த தேர்தலில் மக்களுக்குப் பணம் வழங்கும் பணியில் இருக்கிறார்கள்.
தேர்தல் ஆணையம் விதிப்படி பிரச்சாரத்துக்கு 5 வாகனங்களுக்கு மேல் செல்லக்கூடாது. ஆனால், அமித் ஷா பிரச்சாரத்தில் 100 வாகனங்கள் செல்கின்றன. சிலருக்கு மட்டும் அதிகமான சலுகைகள் தரப்படுகின்றன.
மத்திய்பிரதேசம் மற்றும் பாஜக ஆளும் சில மாநிலங்களில் இருந்து போலீஸார் வரவழைக்கப்பட்டு நந்திகிராமில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் கிராமங்களில் உள்ள மக்கள் அச்சுறுத்துகிறார்கள், முடிவை தங்களுக்குச் சாதகமாக மாற்ற பாஜக முயல்கிறது.
வெளிமாநில போலீஸார் இங்கு தேர்தல் முடியும்வரைதான் இருப்பார்கள். ஆனால், எங்களுக்குத் துரோகம் செய்த துரோகிகளுக்குத் தகுந்த பதிலடி கொடுப்போம்.
இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.