Last Updated : 30 Mar, 2021 02:52 PM

 

Published : 30 Mar 2021 02:52 PM
Last Updated : 30 Mar 2021 02:52 PM

வெள்ளிக் காசுக்காக ஏசுவை யூதாஸ் காட்டிக்கொடுத்தார்; தங்கத்துக்காக கேரள மக்களுக்கு இடதுசாரி அரசு துரோகம் செய்துவிட்டது: பிரதமர் மோடி கடும் தாக்கு

பாலக்காடு நகரில் தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி ஈடுபட்ட காட்சி : படம் ஏஎன்ஐ

பாலக்காடு

சில வெள்ளிக்காசுகளுக்காகக் கடவுள் ஏசுவை யூதாஸ் காட்டிக்கொடுத்தார், சில தங்கக் கட்டிகளுக்காக கேரள மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி அரசு துரோகம் செய்துவிட்டது என்று பிரதமர் மோடி கடுமையாகச் சாடினார்.

கேரளாவில் 140 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இதில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயகக் கூட்டணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும் கடும் போட்டி இருந்து வருகிறது. மூன்றாவதாக பாஜகவும் தீவிரமாகப் பிரச்சாரம் செய்துவருகிறது.

பாலக்காடு தொகுதியில் போட்டியிடும் மெட்ரோ மேன் இ ஸ்ரீதரனை ஆதரித்து பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் முதன்முதலாகப் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:

கேரள மாநிலத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும் நீண்டகாலமாகக் கேரளாவை ஆண்டு வருகின்றன. இரு கட்சிகளுக்கு இடையே பிக்ஸிங் (ரகசிய ஒப்பந்தம்) இருக்கிறது. முதல்முறையாகத் தேர்தலில் வாக்களிக்கும் இளைஞர்கள் மாற்றதுத்காக வாக்களிக்க வேண்டும்.

கேரள சமீபகாலமாக மக்கள் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இளைஞர்கள் முன்னெடுக்கிறார்கள். மாநிலத்தில் ஆளும் இடதுசாரிகள் அரசைப் பற்றிக் கூற வேண்டுமென்றால், சில வெள்ளிப்பணத்துக்காக கடவுள் ஏசுவை யூதாஸ் காட்டிக்கொடுத்தார். ஆனால், இங்கு ஆட்சியில் இருக்கும் இடதுசாரி அரசு சில தங்கக்கட்டிகளுக்காக, மக்களுக்குத் துரோகம் செய்துவிட்டது.

சபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துகிறோம் எனக் கூறி அப்பாவி பக்தர்கள் மீது இடதுசாரி அரசு மோசமாக நடந்து கொண்டது. சபரிமலை ஐயப்பன் கோயிலின் பாரம்பரியத்தைக் காக்கப் போராடிய பக்தர்கள் மீது போலீஸாரை ஏவி தடியடி நடத்தியது.

பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு இடதுசாரி அரசு வெட்கப்பட வேண்டும். ஆனால், இங்கு நடந்த சம்பவங்கள் அனைத்தையும் வேடிக்கை பார்த்து யுடிஎப் கூட்டணி மவுனமாகத்தான் இருந்தது.

நான் பாஜகவில் இருப்பதைப் பெருமையாகக் கருதுகிறேன். தேசத்தின் நிலத்தையும், பாரம்பரியத்தை எப்போதும் காக்க இந்த கட்சி பாடுபடும். நான் யுடிஎப் மற்றும் எல்டிஎப் கட்சிகளுக்கு நான் ஒன்றைச் சொல்லிக்கொள்கிறேன், நீங்கள் கலாச்சாரத்தை அவமதித்தால், நாங்கள் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கமாட்டோம்.

எங்கள் கட்சியின் மாநிலத் தலைவர் சுரேந்திரன், ஐயப்பன் கோயில் போராட்டத்தின்போது, அவரை போலீஸார் கைது செய்தனர், மோசமாக நடத்தினர். அவர் செய்த குற்றம் என்ன, கேரளாவின் பாரம்பரியங்கள் பற்றித்தானே பேசினார்.

கேரளாவில் பலமுறை இடதுசாரிகள் ஆட்சியில் இருந்துள்ளன. ஆனால், இன்னும் அந்தக் கட்சியின் தலைவர்கள் சாதாரண குண்டர்களைப்போல்தான் நடந்து கொள்கிறார்கள். இடதுசாரிகள் தலைவர்களின் ஆதரவைப் பெறுவதற்காக, அரசியல் எதிரிகள் கொல்லப்படுகிறார்கள், கடத்தப்படுகிறார்கள், தாக்கப்படுகிறார்கள்.

நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். கேரளாவில் பாஜக ஆட்சிக்கு வந்தால், அரசியல் வன்முறைகள் முடிவுக்கு வரும். ஜனநாயகத்தில் அரசியல்ரீதியாக கருத்து வேற்றுமைகள் இருக்கலாம். ஆனால், வன்முறையை ஏற்க முடியாது. ஏராளமான இளம் பாஜக தொண்டர்கள் இங்கு உயிர்த்தியாகம் செய்துள்ளார்கள். நிச்சயமாக பாஜக அரசு அமைந்தால் அரசியல் வன்முறை முடிக்கு வரும்.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x