

கன்னியாஸ்திரிகள் தாக்கப்படவில்லை என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேசியது அப்பட்டமான பொய். இப்படிப் பேசியதற்கு வெட்கப்பட வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்திலிருந்து கன்னியாஸ்திரிகள் இருவரும், இரு பெண்களும் கடந்த 19-ம் தேதி ஹரித்துவார்-பூரி உத்கல் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒடிசா மாநிலம் பூரி நகருக்குச் சென்றனர்.
கடந்த வெள்ளிக்கிழமை ஜான்ஸி நகருக்கு ரயிலில் வந்தபோது, ரயிலில் இருந்த பஜ்ரங் தள அமைப்பைச் சேர்ந்த சிலர், கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் மதமாற்றம் செய்து இரு பெண்களை அழைத்துச் செல்கிறார்கள் எனக் கூறி அவர்களை அவமானப்படுத்தி அவர்களைப் பாதி வழியிலேயே ரயிலில் இருந்து இறக்கிவிட்டனர். இதுகுறித்து ரயில்வே போலீஸாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
ரயில்வே போலீஸார் நடத்திய விசாரணையில், அந்த கன்னியாஸ்திரிகள் மீது எந்தக் குற்றச்சாட்டும் இல்லை, அவர்கள் முறையான அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அடுத்த ரயிலில் கன்னியாஸ்திரிகளையும், அவருடன் வந்த இரு பெண்களையும் ரயில்வே போலீஸார் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து நேற்று கருத்து தெரிவித்த மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், "கன்னியாஸ்திரிகள் மீது யாரும் தாக்குதல் நடத்தவில்லை. அவர்கள் மதமாற்றம் செய்ய இரு பெண்களை அழைத்துச் செல்கிறார்கள் என நினைத்துப் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், அந்தப் புகாரில் உண்மையில்லை எனத் தெரிந்த நிலையில் அவர்கள் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர். தாக்குதல் நடத்தப்பட்டதாக முதல்வர் பினராயி விஜயன் கூறியது பொய்" எனத் தெரிவித்தார்.
இந்நிலையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கருத்துக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
காசர்கோட்டில் பினராயி விஜயன் நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:
''கன்னியாஸ்திரிகள் யாரும் தாக்கப்படவில்லை, அவர்களின் பயண ஆவணங்கள் மட்டும் பரிசோதிக்கப்பட்டன என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகிறார். உண்மையில் கன்னியாஸ்திரிகள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் ஏபிவிபி அமைப்பினர். இந்த தேசத்தில் கன்னியாஸ்திரிகள் தாக்கப்பட்டுள்ளார்கள். ஒருவருக்கு இந்த தேசம் முழுவதும் செல்ல உரிமை இருக்கிறது. ஆனால், கன்னியாஸ்திரிகள் என்ற காரணத்துக்காகத் தாக்கப்பட்டுள்ளார்கள்.
இந்தச் செயல் வெட்கப்பட வேண்டியது. ஏபிவிபி அமைப்பினர் கன்னியாஸ்திரிகளுக்கு எதிராக நடந்துகொண்ட செயலை மத்திய அமைச்சர் நியாயப்படுத்திப் பேசுகிறார். தாக்குதலையும் நியாயப்படுத்துகிறார். இது ஆர்எஸ்எஸ் திட்டத்தை மத்தியில் ஆளும் அரசு நடைமுறைப்படுத்துகிறது என்பதற்கு அடையாளம்
மாட்டிறைச்சி விவகாரத்திலும் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மாட்டிறைச்சி விவகாரத்தில் முஸ்லிம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் நடந்தது.
போராட்டம் நடத்தப்பட்டும் அவர்கள் மாறியுள்ளார்களா? சில கன்னியாஸ்திரிகளைப் பார்த்தவுடன் அவர்களைத் தாக்குகிறார்கள். குற்றவாளிகளைக் காப்பாற்றும் முயற்சியில் மத்திய அமைச்சர் பேசியுள்ளார்".
இவ்வாறு பினராயி விஜயன் தெரிவித்தார்.