Published : 30 Mar 2021 07:03 AM
Last Updated : 30 Mar 2021 07:03 AM

குடியுரிமை சட்ட திருத்த விவகாரத்தை கையில் எடுக்கும் மார்க்சிஸ்ட்: எதிர்க்கட்சிகள் எழுப்பும் சபரிமலை பிரச்சினையை சமாளிக்க வியூகம்

திருவனந்தபுரம்

கேரளத்தில் மொத்தமுள்ள 140 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடக்கிறது. கேரளத்தில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், பாஜக இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இந்தத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக கட்சிகள் சபரிமலை விவகாரத்தை கையில் எடுத்திருக்கும் நிலையில் மார்க்சிஸ்ட் கட்சி குடியுரிமை சட்ட விவகாரத்தை மக்கள் மத்தியில் முன்வைக்கிறது.

அனைத்து வயதுடைய பெண்களையும் சபரிமலையில் அனுமதிக்கலாம் எனஉச்ச நீதிமன்றம் தீர்ப்புக் கூறியது. அதை கேரள இடதுசாரி அரசு அமல்படுத்தியது. முதல்வர் பினராயி விஜயன் உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்தக் காட்டிய வேகம் இந்து உணர்வாளர்களின் மனதை புண்படுத்தியது. இதற்கு எதிராக காங்கிரஸ், பாஜக கட்சிகளும் போராட்டத்தை முன்னெடுத்தன. சபரி
மலை விவகாரம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் கடுமையாக எதிரொலித்தது. அதன் காரணமாக கேரளத்தில் மொத்தமுள்ள 20 மக்களவைத் தொகுதிகளில் 19 தொகுதிகளை காங்கிரஸ் கூட்டணி வாரிச்சுருட்ட மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஆலப்புழா தொகுதிமட்டுமே கிடைத்தது. இந்தத் தேர்தலிலும் சபரிமலை விவகாரத்தை காங்கிரஸ், பாஜக கட்சிகள் கையில் எடுத்துள்ளன.
காங்கிரஸ், பாஜக கட்சிகள் சபரிமலை ஐயப்பனின் புனிதத்தைக் காக்கும்வகையில் தனிச்சட்டம் இயற்றப்படும் என தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளன. அதேநேரம் முற்போக்கு பேசக்கூடிய இடதுசாரிகளால் இப்படியான வாக்குறுதிகளைக் கொடுக்கமுடியவிலை. இதனாலேயே மார்க்சிஸ்ட் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் சபரிமலை விவகாரம் குறித்து எதையும் குறிப்பிடவில்லை.

இந்நிலையில்தான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கேரளத்தில் வீரியத்துடன் போராட்டங்கள் நடந்துவந்த குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை மார்க்சிஸ்ட் கட்சி கையில் எடுத்துள்ளது. இவ்விவகாரத்தில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கட்சியினர் இணைந்து சி.ஏ.ஏவுக்கு எதிராக சட்டப் பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றியிருந்தனர்.

இப்போது மார்க்சிஸ்ட், காங்கிரஸ் கட்சிகள் குடியுரிமை சட்டதிருத்தம் கேரளத்தில் செயல்படுத்தப்படாது என தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளன. ஆனால் பொதுவெளியில் காங்கிரஸ் அதை முன்னெடுக்கவில்லை. ஆனால் எல்.டி.எப் கூட்டணி சி.ஏ.ஏவை கேரளத்
தில் அமல்படுத்தமாட்டோம் என்று சொல்லியே ஓட்டுக்கேட்கிறது. மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதான பிரச்சாரமாக அதுவே ஒலிக்கிறது. அதேநேரத்தில் பாஜகவோ குடியுரிமை சட்டதிருத்த மசோதாவை அமல்படுத்துவோம் என்றுசொல்லியே தேர்தலை சந்திக்கிறது.

கோட்டயத்தில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சருமான ராஜ்நாத்சிங் பேசுகையில், ‘கேரளத்தில் தேர்தலில்கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும் கட்சி நிறைவேற்றும். மத்திய அரசு ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்தது. இஸ்லாமிய பெண்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி தலாக் முறையை சட்டத்தால் தடைசெய்தது. இதேபோல் விவசாயத்தைப் பாதுகாக்க மூன்று வேளாண் சட்டங்களையும், குடியுரிமை சட்டத்தையும் அமல்படுத்துவோம். பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் துன்புறுத்தப்பட்ட சிறுபான்மையினரின் துயரங்களை நிவர்த்திசெய்ய சிஏஏ அவசியம். அதேநேரத்தில் சிறுபான்மையினர் பாஜகவைப் பார்த்துபயப்படத் தேவையில்லை. இப்போது இருப்பது போலவே அவர் அவர் கலாச்சாரப்படி வாழலாம். அனைத்து தரப்பு மக்களிடமும் கலந்தாலோசித்துத்தான் சி.ஏ.ஏ கொண்டுவரப்படும்’’ என்றார்.

கூடவே தங்கக் கடத்தல் வழக்கை விசாரிக்கும் அமலாக்க இயக்குநரக அதிகாரிகளுக்கு எதிராக நீதிவிசாரணை கோரும் இடதுசாரி அரசையும் கடுமையாக விமர்சித்தார் ராஜ்நாத் சிங். மத்திய அரசின் கீழ் இயங்கும் நிறுவனத்தின் மீது எப்படி விசாரணையை மாநில அரசு தொடங்கமுடியும் எனவும் கேள்வி எழுப்பியதோடு இது அரசியலமைப்பு சட்டத்துக்கே எதிரானது எனவும் சாடினார்.

அதேநேரத்தில் கோழிக்கோடு மாவட்டத்தின் புரமேரி பகுதியில் தேர்தல் பரப்புரை செய்த முதல்வர் பினராயி விஜயன், ‘அமைச்சர் ராஜ்நாத்சிங்கின் பேச்சு சிறுபான்மையினருக்கு விடப்பட்ட சவால். சிஏஏ அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சரே சொல்கிறார். நாங்கள் எங்கள் நிலைப்பாட்டில் தெளிவாகஇருக்கிறோம். கேரளத்தில் சிஏஏ செயல்படுத்தப்படாது. வட இந்தியாவில் சிறுபான்மை மக்கள் தாக்கப்படுகிறார்கள். கன்னியாஸ்திரிகள் ரயிலில் இருந்து பாதியில் இறக்கிவிடப்பட்டுள்ளனர். சிறுபான்மையினரின் கலாச்சாரத்தை நசுக்க வலதுசாரிகள் குறிவைக்கின்றனர். இதுபோன்ற சகிப்புத்தன்மை அற்ற போக்கினை கேரளத்தில் நடக்கவிடமாட்டோம்’’என்றார்.

முதல்வர் பினராயி விஜயன் சி.ஏ.ஏ விவகாரத்தை மையப்படுத்திப் பேசிவரகேரள மாநில பாஜக தலைவர் கே.சுரேந்திரனோ, ‘கேரளாவில் பிறநாடுகளில் இருந்து குடியேறியவர்கள் யாரும் இல்லை. ஒருசில வாக்குகளுக்காகவே பினராயி விஜயன் இப்படி பிரச்சாரம் செய்கிறார்’ என்கிறார்.

மார்க்சிஸ்ட் வியூகம்

கேரளத்தில் 25 சதவிகிதம் இஸ்லாமியவாக்குகள் உள்ளன. மொத்தமுள்ள 140 தொகுதிகளிலும் பல்வேறு கட்சிகளிலும் சேர்த்து 70க்கும் அதிகமான இஸ்லாமிய வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். பாஜகவும் இரு இஸ்லாமியர்களுக்கு போட்டியிட வாய்ப்பு கொடுத்துள்ளது. அதுபோக குருவாயூர் தொகுதியில் போட்டியிட மனுத்தாக்கல் செய்திருந்த பாஜக வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட அதே தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் நசீர் என்பவருக்கு பாஜக ஆதரவு கொடுத்துள்ளது. முன்னதாக பாஜகவின் திருச்சூர் வேட்பாளர் நடிகர் சுரேஷ் கோபி, பாஜக வேட்பாளரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து நிருபர்கள் கேள்வி கேட்டபோது, சி.பி.எமை தோற்கடிக்கும்வகையில் வாக்களிக்க வேண்டும் எனச் சொல்லியிருந்தார். இது காங்கிரஸை ஆதரிப்பதுபோல் சர்ச்சை கிளம்ப, சுயேச்சை வேட்பாளருக்கு ஆதரவு கொடுத்துள்ளது பாஜக.

காங்கிரஸ் கட்சியில் பிரதானமாக இருக்கும் முஸ்லிம் லீக் கட்சிக்கு கடந்த தேர்தலில் 23 தொகுதிகளைக் கொடுத்த காங்கிரஸ், இந்தமுறை 26 தொகுதிகளைக் கொடுத்திருக்கிறது. இதேபோல் மார்க்சிஸ்ட் கட்சியும் அதிகமான இஸ்லாமியர்களுக்கு போட்டி
யிட வாய்ப்பு கொடுத்துள்ளது. காங்கிரஸோடு, முஸ்லிம் லீக் இருந்தாலும், சி.ஏ.ஏ விவகாரத்தை தேர்தல் நேர அஸ்திரமாக எடுத்து பிரச்சாரத்தில் இஸ்லாமியர்களைக் கவர்ந்து வருகிறது மார்க்சிஸ்ட் கட்சி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x