

பெண் மானபங்க வழக்கில் குற்றவாளிக்கு அவர் செய்த பாவத்துக்கு பரிகாரமாக ஒரு மாதத்துக்கு சமூகப் பணி செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அப்பெண் தனது புகாரை தொடர விரும்பவில்லை என்று கூறியதைத் தொடர்ந்து, அந்த நபர் மீதான குற்ற வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் ஒப்புக் கொண்டது.
பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் அந்த நபர் மீது பெண்ணை மானபங்கம் செய்தது மற்றும் அச்சுறுத்தியதாக டெல்லி விகாஸ்புரி காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு ஜூலை 15-ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது. விகாஸ்புரி பகுதி வணிக வளாகம் ஒன்றில் அப்பெண் அமர்ந்திருந்த போது, அங்கு வந்த அந்த நபர் தான் ஒரு கோடீஸ்வர் என்று கூறி அப்பெண்ணை நெருங்க முயன்றுள்ளார். விலகிச் செல்லுமாறு அப்பெண் கண்டித்ததை தொடர்ந்து அந்த நபர் அங்கிருந்து சென்று விட்டார். என்றாலும் திரும்பி வந்து, அப்பெண்ணின் கையை பிடித்து முறுக்கியுள்ளார்.
மேலும் முகத்தில் குத்தி யுள்ளார். இதையடுத்து அப்பெண் கூச்சலிட்டதைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து ஓடிவிட்டார். அப்பெண் அளித்த புகாரின் பேரில் அந்த நபர் ஜூலை 21-ம் தேதி கைது செய்யப்பட்டு, பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில் அப்பெண்ணுடன் சமரசம் ஏற்பட்டுள்ளதால் தன்மீதான வழக்கை ரத்து செய்ய கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் அந்த நபர் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கில் அந்த நபரை அவரது பாவத்துக்கு பரிகாரமாக, போதைக்கு அடிமையானவர்கள் புனர்வாழ்வு மையம் ஒன்றில் ஒரு மாதத்துக்கு சமூகப் பணி செய்ய டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. எதிர்காலத்தில் இதுபோல் நடந்து கொள்ள கூடாது என அவரை எச்சரித்த நீதிமன்றம் அவருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது.
மேலும் புகாரை தொடர விரும்பவில்லை என அப்பெண் கூறியதால் வழக்கை ரத்து செய்ய நீதிமன்றம் ஒப்புக் கொண்டது.