

மும்பை நிழல் உலக தாதா சோட்டா ராஜனை 10 நாள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க டெல்லி நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது.
இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையில் 1970 முதல் 1995 வரை நிழல் உலக தாதாவாக சோட்டா ராஜன் வலம் வந்தார். ஒரு காலகட்டத்தில் தாவூத் இப்ராஹிமின் வலது கரமாகவும் செயல்பட்டார்.
மும்பை தொடர் குண்டுவெடிப்புக்குப் பிறகு தாவூதும் சோட்டா ராஜனும் தனித்தனியாகப் பிரிந்தனர். போலீஸார் தீவிரமாக தேடியதால் 1995-ல் சோட்டா ராஜன் வெளிநாட்டுக்குத் தப்பினார்.
இந்தோனேசியா, தாய்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் சுமார் 20 ஆண்டுகள் அவர் தலைமறைவாக வாழ்ந்தார். அண்மையில் அவர் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தோனேசியாவின் பாலி தீவுக்கு சென்றார்.
கடந்த 25-ம் தேதி ஆஸ்திரேலியா திரும்புவதற்காக அவர் பாலி விமான நிலையத்துக்கு வந்தபோது இன்டர்போல் போலீஸார் அவரை கைது செய்தனர். அங்கிருந்து கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை அவர் டெல்லிக்கு அழைத்து வரப்பட்டார்.
முதலில் சிபிஐ அலுவலகத் துக்கு கொண்டு செல்லப்பட்ட அவரிடம் முதற்கட்ட விசா ரணைகள் நடைபெற்றன. நேற்று அவர் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 10 நாள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதுகுறித்து சிபிஐ வட்டாரங்கள் கூறியதாவது:
கடந்த 2003-ல் ஜிம்பாப்வே நாட்டின் ஹராரே நகரில் சோட்டா ராஜன் தங்கியிருந்தபோது மோகன் குமார் என்ற போலி பெயரில் அவருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அவர் மீதும் சில அதிகாரிகள் மீதும் கடந்த அக்டோபர் 31-ம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கடந்த 1996-ல் விஜய் கடம் என்ற போலி பெயரில் சோட்டா ராஜன் பாஸ்போர்ட் பெற்றுள்ளார். இதுதொடர்பாக ஏற்கெனவே 2002-ல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்குகள் தொடர்பாக சோட்டா ராஜனை 10 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.