Published : 29 Mar 2021 02:03 PM
Last Updated : 29 Mar 2021 02:03 PM

நந்திகிராமில் வெல்வாரா மம்தா பானர்ஜி? - கடும் போட்டியை ஏற்படுத்தும் சுவேந்து அதிகாரி

நந்திகிராம்

மேற்குவங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியில் ஏப்ரல் 1-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அவரை எதிர்த்து பாஜக சார்பில் மண்ணின் மைந்தரான சுவேந்து அதிகாரி களமிறங்கியிருப்பது கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இந்தத் தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சி கட்சி கடுமையாகப் போராடி வருகிறது.

அதேநேரத்தில் மம்தாவுக்கு கடும் நெருக்கடியும், சவால்களையும் அளித்துவரும் பாஜக ஆட்சியைப் பிடிக்க பல்வேறு திட்டங்கள் தீட்டி, காய்களை நகர்த்தி வருகிறது. இந்தத் தேர்தலில் இரு கட்சிகளுக்கும் கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்றொரு புறம் காங்கிரஸ் - இடதுசாரிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றனர். பிஹார் சட்டப்பேரவையில் நடந்த தேர்தலில் 5 இடங்களில் வெற்றி பெற்ற ஏஐஎம்ஐஎம் கட்சி மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தலிலும் போட்டியிடுகிறது.

இதனால் மேற்கு வங்கத்தில் நாள்தோறும் கட்சித் தலைவர்களுக்கு இடையே பரபரப்பான வாதங்கள், அறிக்கைகள் அனல் பறக்க வெளியாகி வருகின்றன. இதில் முதல்கட்டத் தேர்தல் 27-ம்தேதி நடைபெற்றது. 30 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் சுமார் 80 சதவீத வாக்குகள் பதிவாகின. மீதமுள்ள 7 கட்டத் தேர்தல் நடைபெற வேண்டும்.

2-ம் கட்டத் தேர்தல் ஏப்ரல் 1-ம் தேதி 30 தொகுதிகளுக்கு நடைபெறுகிறது. இதில் முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடும் நந்திகிராம் தொகுதியும் ஒன்றாகும். இங்கு முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்து பாஜக சார்பில் சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார். திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராகவும், அமைச்சராகவும் இருந்த சுவேந்து அதிகாரி பின்னர் பாஜகவில் இணைந்து அக்கட்சி சார்பில் களமிறங்கியுள்ளார்.

நந்திகிராம் தொகுதி கிழக்கு மித்னாபூர் மாவட்டத்துக்குட்பட்டது. நந்திகிராமில் சுவேந்து அதிகாரிக்கான செல்வாக்கு வலுவானது. நந்திகிராமில் திரிணமூலுக்கு வலுவான இடத்தைப் பெற்றுத் தந்ததில் சுவேந்து அதிகாரியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது.

நந்திகிராமில் கடந்த 2007-ம் ஆண்டில் ரசாயன ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது திரிணமூல் காங்கிரஸ் அங்கே தனது மக்கள் ஆதரவு நிலைப்பாட்டை உறுதி செய்தது. அதன்பின் திரிணமூல் தேர்தலில் வெற்றிபெற நந்திகிராம் போராட்டம், சிங்கூர் போராட்டம் கைகொடுத்தன. இந்த போராட்டங்களை முன்னின்று நடத்தி திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு வலுவான அடித்தளம் அமைத்தவர் சுவேந்து அதிகாரி. இதனால், மம்தா பானர்ஜிக்கு நிச்சயமாக சுவேந்து கடுமையான போட்டியை ஏற்படுத்தியுள்ளார்.

தனது மக்கள் செல்வாக்கை ஆதாரமாகக் கொண்டே, நந்திகிராமில் குறைந்தது 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்திலாவது மம்தாவை வீழ்த்துவேன் என சுவேந்து அதிகாரி சவால்விட்டுள்ளார். அதுமட்டுமின்றி மிட்னாபூர் எப்போதுமே மண்ணின் மைந்தனையே தேர்வு செய்யும் எனவும் சுவேந்து அதிகாரி கூறியுள்ளார்.

சுவேந்து அதிகாரி கட்சிக்கு துரோகம் செய்து விட்டு பாஜகவுக்கு தாவி விட்டார், அவருக்கு வாக்களித்த மக்களையும் அவர் முதுகில் குத்தி விட்டார் என மம்தா பானர்ஜி பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்தநிலையில் மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் இன்று பாத யாத்திரை நடத்தி வருகிறார். அவருக்கு காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு செல்கிறார். அவரது கட்சித் தொண்டர்களும் உடன் அணி வகுத்துச் செல்கின்றனர். அங்கு நாளையுடன் பிரச்சாரம் ஓய்வதால் அவர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

அதுபோலவே பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியும் எதிர் பிரச்சாரம் செய்து வருகிறார். இதனால் இரு வேட்பாளர்கள் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. சொந்த ஊரில் செல்வாக்கை நிருபித்துக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் சுவேந்து அதிகாரியும், அதேசமயம் திரிணமூல் காங்கிரஸின் முதல்வர் வேட்பாளரான மம்தா பானர்ஜியின் தனது தனிப்பட்ட செல்வாக்கை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயத்திலும் உள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x