

மும்பை காவல்துறையைச் சேர்ந்த ஒரு சில போலீஸாருக்கும் தேடப்பட்டுவரும் தாவூத் இப்ராஹிமுக்கும் ரகசிய தொடர்பு இருக்கிறது என நிழல் உலக தாதா சோட்டா ராஜன் தெரிவித்துள்ளார்.
மும்பை நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் கூட்டாளியாக இருந்தவர் சோட்டா ராஜன். பின்னர் தாவூத்திடம் இருந்து பிரிந்து தனித்து செயல்பட்டார். மும்பை குண்டுவெடிப்பு, கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், போதை கடத்தல் உட்பட பல்வேறு வழக்குகள் இவர் மீது உள்ளன.
இந்தியாவில் இருந்து தப்பிச் சென்ற சோட்டா ராஜனை சமீபத்தில் இந்தோனேசியாவில் இண்டர்போல் போலீஸார் கைது செய்தனர். அவரை இந்தியா அழைத்து வர சிபிஐ அதிகாரிகள் அந்த நாட்டின் பாலி தீவுக்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில், இன்று (செவ்வாய்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த சோட்டா ராஜன், "ஒரு சில மும்பை போலீஸாருக்கும் தேடப்பட்டுவரும் தாவூத் இப்ரஹிமுக்கும் ரகசிய தொடர்பு இருக்கிறது. என் மீது தவறான வழக்குகள் திணிக்கப்பட்டுள்ளன. மும்பை போலீஸார் எனக்கு அநீதி இழைத்துவிட்டனர். இருந்தாலும், தாவூத்துக்கும், தீவிரவாதத்துக்கும் எதிரான எனது போராட்டம் தொடரும். தாவூத் மீது எனக்கு அச்சமில்லை" என்றார்.
'என் மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை'
மும்பை திரும்புவதற்கு அச்சப்படுகிறீர்களா என சோட்டா ராஜனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ராஜன், "என் மீதான குற்றச்சாட்டுகள் தவறானவை. இந்திய அரசு என்னை டெல்லி, மும்பை என எந்தச் சிறையில் வேண்டுமானாலும் அடைக்கும். ஆனால், எனக்கு எவ்வித அநீதியும் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மும்பை போலீஸார் எனக்கு துரோகம் செய்துவிட்டனர். இதை கருத்தில் கொண்டு அரசு எனக்கு நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்" என்றார்.
விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்
இதற்கிடையில், சோட்டா ராஜன் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படயிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்போது, இந்தோனேசிய போலீஸார் அவர் மீதான வழக்குகள் குறித்து நீதிமன்றத்தில் எடுத்துரைப்பர் எனத் தெரிகிறது. இந்த நடைமுறைகள் முடிந்தவுடன் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் ராஜன் நாடு கடத்தப்படுவார் என இந்திய அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
பட்நவிஸ் தகவல்:
சோட்டா ராஜன் மீதான பல வழக்குகள் மும்பையில் பதிவு செய்யப்பட்டுள்ளதால், பாலியில் இருந்து அவரை சிபிஐ அதிகாரிகள் மும்பைக்கு விரைவில் அழைத்து வருவார்கள் என்று கூறப்பட்டு வந்த நிலையில் அதை மகாராஷ்டிரா முதல்வர் உறுதிப்படுத்தியுள்ளார்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்:
சோட்டா ராஜனை காவலில் வைக்க, மும்பை ஆர்தர் சாலையில் உள்ள சிறைச் சாலையை அதிகாரிகள் தயார்படுத்தி வருகின்றனர். அங்கு உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. ஆர்தர் சாலையில் சிறையில் உள்ள கைதிகளின் விவரங்களை அதிகாரிகள் தீவிரமாக ஆராய்ந்து வருகின்றனர்.
மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் கசாப் வைக்கப்பட்டிருந்த ‘செல்’லில் சோட்டா ராஜனையும் காவலில் வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், சோட்டா ராஜன் மீது தாக்குதல் எதுவும் நடக்காமல் இருக்க, சிறைக்குள்ளேயே சிறப்பு நீதிமன்றம் மூலம் விசாரணை நடத்த சிறை அதிகாரிகள் கோரிக்கை வைக்க உள்ளனர் என்று சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.