

நாடுமுழுவதும் கரோனா வேகமாக பரவி வருவதால் பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் பொது இடங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.
வண்ணங்களின் திருவிழாவான ஹோலிப் பண்டிகை நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. மகாராஷ்டிராவில் கரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் வழக்கமான உற்சாகமின்றி மக்கள் வீடுகளிலேயே ஹோலிப் பண்டிகையைக் கொண்டாடி வருகின்றனர்.
ஹோலியை முன்னிட்டு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "அனைவருக்கும் ஹோலி வாழ்த்துகள். மகிழ்ச்சியின், சந்தோஷத்தின், குதூகலத்தின் விழாவான இத்திருநாள் நாட்டு மக்கள் அனைவருக்கும் புத்துணர்ச்சியும், புதிய உத்வேகமும் நல்கட்டும் என நான் வாழ்த்துகிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட பிற பகுதிகளில் வழக்கம்போல் கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. எனினும் பொது இடங்களில் ஹோலி கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக சாலைகளில் மக்கள் திரண்டு ஒருவர் மீது ஒருவர் வண்ணப்பொடிகளை தூவியும், வண்ணம் கலந்த தண்ணீரை பீய்ச்சியடித்தும் கொண்டாடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கரோனா வேகமாக பரவி வருவதால் பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் பொது இடங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.