

ரோஹிங்கியா முஸ்லிம்களை மியான்மருக்கு திருப்பி அனுப்ப, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் உறுப்பினராக உள்ள இந்தியா முக்கிய பங்காற்ற வேண்டும் என பிரதமர் மோடிக்கு வங்கதேச பிரதமர் கோரிக்கை வைத்துள்ளார்.
வங்கதேசத்தின் 50-வது சுதந்திர தின விழாவில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக டாக்கா சென்றார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், அந்நாட்டு பிரதமர் ஷேக் ஹசீனாவை நேற்றுமுன்தினம் சந்தித்துப் பேசினார். அப்போது வர்த்தகம், கல்வி,சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவை பலப்படுத்துவது தொடர்பாக இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். மேலும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் விவகாரம் குறித்தும் இருவரும் பேசினர்.
இந்த சந்திப்புப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் கூறி யிருப்பதாவது:
மியான்மரிலிருந்து அகதிகளாக தஞ்சமடைந்த ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் அடைக்கலம் கொடுத்த வங்கதேசத்துக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரித்தார்.
அதேநேரம், அகதிகளாக குடியேறியுள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களை மியான்மருக்கு திருப்பி அனுப்ப, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர் (நிரந்தரமற்ற) என்ற வகையில் இந்தியா முக்கியபங்காற்ற வேண்டும் என பிரதமர் மோடியிடம் வங்கதேச பிரதமர்ஷேக் ஹசீனா கோரிக்கை வைத்துள்ளார். தீவிரவாத செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட செயல்களில் அவர்கள் ஈடுபட வாய்ப்பு இருப்பதால், முடிந்தவரை அவர்களை விரைவாக திருப்பி அனுப்ப வேண்டியது அவசியம் என்றும் ஹசீனாவலியுறுத்தினார். இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என இந்தியா உறுதி அளித்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மியான்மரின் ராக்கைன் மாகாணத்தில் 2017-ல் உள்நாட்டுப் போர் நடந்தது. இதனால் அங்கிருந்து வெளியேறிய சுமார் 11 லட்சம் ரோஹிங்கியா முஸ்லிம்கள் வங்கதேசத்தில் தஞ்சமடைந்தனர். அவர்கள் காக்ஸ் பஜார் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
12 லட்சம் தடுப்பூசி இலவசம்
பிரதமர் மோடி வங்கதேச பயணத்தின்போது உறுதி அளித்தபடி, 12 லட்சம் அஸ்ட்ரா ஜெனிகாகரோனா தடுப்பூசி வங்கதேசத்துக்கு இலவசமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் கரோனா பரவலை தடுக்க, தொடர்ந்து தடுப்பூசியை அனுப்பி வைக்க வேண்டும் என வங்கதேசம் கோரிக்கை வைத்துள்ளது.
சீரம் இன்ஸ்டிடியூட் வங்கதேசம் இடையே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. 3 கோடி அஸ்ட்ரா ஜெனிகா கரோனா தடுப்பூசியை வங்கதேசத்துக்கு அனுப்ப இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது. இதுவரை 90 லட்சம் தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.