Published : 29 Mar 2021 03:15 AM
Last Updated : 29 Mar 2021 03:15 AM

15 ஆண்டுகளுக்கு மேல் பழசான வாகனங்களின் எண்ணிக்கை 4 கோடி- 70 லட்சத்துடன் கர்நாடகா முதலிடம்

இந்திய சாலைகளில் இயங்கும் மொத்த வாகனங்களில் 4 கோடி வாகனங்கள் 15 ஆண்டுகளுக்கு மேலானவை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் அதிகபட்சமாக கர்நாடக மாநிலத்தில் மட்டும் 70 லட்சம் இயங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சக இணையதளத்தில் 15 ஆண்டுகளுக்கு மேலாக சாலைகளில்இயங்கும் வாகனங்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆந்திரா, மத்தியப் பிரதேசம், தெலங்கானா, லட்சத்தீவுகள் ஆகிய பகுதிகளில் இயங்கும் வாகனங்களின் விவரங்கள் தங்களிடம் இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

4 கோடி பழைய வாகனங்களில் 2 கோடிக்கும் அதிகமானவை 20 ஆண்டுகளுக்கு மேலானவை என அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பழைய வாகனங்கள் மீதுகடுமையான வரி விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி மாநில அரசுகளுடன் கலந்து பேசி பசுமை வரியை விதிக்கப்போவதாக கடந்த ஜனவரி மாதம் அறிவித்தது. சுற்றுச் சூழல் மாசுபடுவதைக் குறைக்க இத்தகைய நடவடிக்கையை எடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி தகுதிச் சான்றுஅளிக்கும்போது பழைய வாகனங்களுக்கு தற்போது விதிக்கப்படும் கட்டணத்தை விட 10 சதவீதம் முதல் 25சதவீதம் வரை கூடுதலாக விதிக்க முடிவு செய்யப்பட்டுள் ளது. இவற்றின் மீது சாலைவரியும் கூடுதலாக விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் சுற்றுச் சூழலை மாசுபடுத்தாத பேட்டரியில் இயங்கும் வாகனங்களுக்கு வரி விலக்கு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல சிஎன்ஜி மற்றும் எல்பிஜி-யில் இயங்கும் வாகனங்களுக்கு கூடுதல் வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தவிர, எதிர்வரும் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டில் பழைய வாகனங்களை முற்றிலும் அழிப்பது தொடர்பான புதிய கொள்கையும் அறிவிக்கப்பட்டுள் ளது. இதன்படி பழைய வாகனங்களை அழித்து புதிய வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு 5 சதவீதம் வரையில் விலைக் கழிவு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப் பிரதேசத்தில் 15 ஆண்டுகளுக்கு மேலான வாகனங்களின் எண்ணி்கை 56.54 லட்சம். இதில் 24.55 லட்சம் வாகனங்கள் 20 ஆண்டு பழமையானவையாகும். டெல்லியில் 49.93 லட்சம் வாகனங்கள் உள்ளன. இவற்றில் 35.11 லட்சம் வாகனங்கள் 20ஆண்டுகளுக்கு மேலானவை யாகும். கேரளாவில் 34.64 லட்சம் பழைய வாகனங்கள் 15 ஆண்டுகளுக்கு மேலான வையாகும். தமிழகத்தில் 33.43 லட்சம் வாகனங்களும், பஞ்சாபில் 25.38 லட்சம் வாகனங்களும், மேற்கு வங்கத்தில் 22.69 லட்சம் பழைய வாகனங் களும் உள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x