'மணமகன் தேவை' என விளம்பரம் கொடுத்த 73 வயது ஓய்வு பெற்ற மைசூரு ஆசிரியை: சமூக வலைதளங்களில் வரவேற்பு

'மணமகன் தேவை' என விளம்பரம் கொடுத்த 73 வயது ஓய்வு பெற்ற மைசூரு ஆசிரியை: சமூக வலைதளங்களில் வரவேற்பு
Updated on
1 min read

மைசூருவை சேர்ந்த 73 வயதானஓய்வு பெற்ற ஆசிரியை தனக்கு‘மணமகன் தேவை' என செய்தித்தாளில் கொடுத்த விளம்பரம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

கர்நாடக மாநிலம் மைசூருவை சேர்ந்தவர் ஜானகி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 73 வயதான இவர் ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்று தனியாக வாழ்ந்து வருகிறார். ஜானகி கடந்த இரு தினங்களுக்கு முன் கன்னட செய்தித்தாள் ஒன்றில் தனக்கு மணமகன் தேவை என விளம்பரம் கொடுத்தார். அந்த விளம்பரத்தில், ‘‘73 வயதான எனக்கு என்னை விட மூத்த, நல்ல ஆரோக்கியமான உடல்நிலையை கொண்ட‌வர் மணமகனாக தேவை. கட்டாயம் பிராமணராக இருத்தல் வேண்டும்''என குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட பெண் கூறுகையில், ‘‘எனக்கு திருமணமாகி விவாகரத்து ஆகிவிட்டது. பெற்றோரும் இறந்துவிட்டனர். நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் என யாரும் இல்லை. கடந்த 30 ஆண்டு களுக்கு மேலாக நான் தனியாக வாழ்ந்து வருகிறேன். முதுமையில் தனிமை மிகவும் வேதனையை தருகிறது. வீட்டில் தனியாக இருக்கவும், தனியாக வெளியில் செல்லவும் பயமாக இருக்கிறது. எனவே எனக்கு கணவர் தேவை என்பதை காட்டிலும், நல்ல துணை தேவைப்படுகிறார். எனக்கு நல்லவர் துணையாக கிடைத்தால் எஞ்சிய வாழ்வை நிம்மதியாக வீட்டில் வாழ முடியும். நடைபயிற்சிக்கு செல்லவும், வெளியில் சென்று வரவும் எளிதாக இருக்கும்''என்றார்.

அந்த விளம்பரம் சமூக வலைதளங்களில் வைரலாகி எதிர்ப்பும் ஆதரவும் பெற்றுள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ரூபா ஹாசன் கூறும்போது, '' 73 வயதில் தனக்கு மணமகன் தேவை என விளம்பரம் கொடுக்கவே மிகப் பெரிய தைரியம் வேண்டும். அந்த பெண்மணியின் துணிச்சலையும், முடிவை வரவேற்கிறேன். என்னைப் போல ஏராளமானோர் அவருக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டோம். அவரை விமர்சித்து கிண்டல் செய்பவர்களை பொருட்படுத்த தேவை இல்லை. அவரவர் வாழ்க்கையை வாழ அவரவருக்கு முழு உரிமை இருக்கிறது. அதில் மதம், சாதி, கலாச்சாரம் போன்றவற்றை கொண்டு தடை போடுவது நியாயம் கிடையாது''என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in