

கேரளாவின் 140 சட்டபேரவைத் தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்கிறது. ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள மார்க்சிஸ்ட் தீவிர களப் பணியாற்றி வருகிறது.இழந்த ஆட்சியை மீண்டும் கைப்பற்ற காங்கிரஸ் முயற்சிக்கிறது. அனைத்து இல்லத்தரசிகளுக்கும் பென்ஷன், சபரிமலையின் புனிதத்தைக் காக்கும் வகையில் சிறப்புச் சட்டம் ஆகியவை ஆட்சிக்கு வர கைகொடுக்கும் என காங்கிரஸ் நம்புகிறது.
கேரள தேர்தல் சூழல் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சருமான ஏ.கே.அந்தோணி, இந்து தமிழுக்கு பேட்டி அளித்துள்ளார்.
பேரவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு சாதகமான அம்சம்?
கேரளாவில் யு.டி.எப்க்கு (காங்கிரஸ் கூட்டணி) வலுவான வாக்கு வங்கி உள்ளது. அவர்கள் மட்டுமல்ல எல்.டி.எப். (இடதுசாரி கூட்டணி) மீண்டும் ஆட்சிக்கு வருவது எவ்வளவு பெரிய ஆபத்து என்பதை உணர்ந்திருக்கும் நடுநிலை வாக்காளர்களும் எங்கள் கூட்டணியை ஆதரிப்பார்கள். பினராயி விஜயன் தலைமையில் மீண்டும் மார்க்சிஸ்ட் ஆட்சி அமைந்தால் அது அவர்களது கட்சியையும் பாழாக்கும்.
மேற்குவங்கத்தில் 34 ஆண்டுகள்ஆட்சியில் இருந்த சி.பி.எம்.கட்சியின் நிலை என்ன ஆனதுஎன்பது அதன் ஆதரவாளர்களுக்கே தெரியும். அதேநிலை கேரளாவில் தொடர அவர்கள் விரும்பமாட்டார்கள். அவர்களும் எங்களுக்கு ஆதரவு கொடுப்பார்கள். ஆணவம், பிடிவாதம், ஊழல், ஆடம்பரம் ஆகியவையே எல்.டி.எப் கூட்டணியின் அடையாளங்கள். மீண்டும் பினராயி விஜயன் ஆட்சிக்கு வந்தால் அது யாருடைய கட்டுப்பாட்டிற்கும் அப்பாற்பட்ட எதேச்சதிகாரம் கொண்டதாக இயங்கும். இதையெல்லாம் படித்தவர்கள் அதிகம் இருக்கும் கேரள மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். இதனால் எல்.டி.எப். அரசு தொடர சாத்தியமே இல்லை.
பினராயி விஜயன் இடதுசாரி களின் குரலைத்தானே ஒலிக் கிறார்?
மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியே கேரளாவில் மீண்டும் மார்க்சிஸ்ட் ஆட்சி வருவதை விரும்பமாட்டார். அப்படிவந்தால் அது வெறுமனே பெயரளவுக்குத்தான் இருக்கும் என அவரும் உணர்ந்திருப்பார். அப்படிஆட்சிக்கு வந்துவிட்டால் எல்.டி.எப். கூட்டணி பினராயி விஜயன்என்னும் தனிமனிதரின் கட்டுப்பாட்டுக்கு செல்லும். அது எதிர்மறையான தாக்கத்தை உருவாக்கும். கட்சியில் பினராயி விஜயனை தாண்டி யாரும் இல்லை என்ற நிலை இப்போதே வந்துவிட்டது. கட்சியும், ஆட்சியும் ஒரு நபரை மட்டுமே மையப்படுத்தி இருப்பது மிகவும் ஆபத்தானது.
தேர்தலில் சபரிமலை பிரச்சினை எதிரொலிக்குமா?
நான் சபரிமலை குறித்து பேச விரும்பியதே இல்லை. ஆனால் முதல்வரின் எதிர்வினை என்னை பேசத் தூண்டுகிறது. அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்திய பின்பே சபரிமலை விவகாரத்தில் இறுதித் தீர்ப்பை அமல்படுத்துவதாக இப்போது பினராயி விஜயன் சொல்கிறார். இதை அவர் ஆட்சியில் இருந்தபோது அல்லவா செய்திருக்க வேண்டும். எல்.டி.எப். மீண்டும் ஆட்சிக்கு வருவதன் ஆபத்தை ஐயப்ப பக்தர்கள் நன்றாகவே உணர்ந்திருக்கிறார்கள். உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் நகல் வருவதற்கும் முன்பே பினராயி விஜயன் இந்த நடவடிக்கைகளை எடுத்திருந்தார்.
எதிர்க்கட்சித் தலைவர், நாயர்சர்வீஸ் சொசைட்டி, பல்வேறு பக்தர்களின் குழுக்களும் தொடக்கத்திலேயே முதல்வரை பேச்சுவார்த்தைக்கு அழைத்தோம்.அப்போதே ஒப்புக்கொண்டிருந் தால் வன்முறை சம்பவங்கள் தவிர்க்கப்பட்டிருக்கும். பக்தர்களின் நலனும் காக்கப்பட்டிருக்கும். முற்போக்கு என்னும் அடையாளம் கொடுத்து இந்துக்களையே இரண்டாக பிரிக்க முதல்வர் முயன்றார். இரண்டு பெண்களை பம்பையில் இருந்து நூற்றுக்கணக்கான போலீஸ் பாதுகாப்புடன் கூட்டிச் சென்றபோதுதான் முதலில் பிரச்சினை வெடித்தது.இதையெல்லாம் நினைவில் வைத்தே பக்தர்கள் வாக்களிப்பார்கள்.
சபரிமலை விவகாரம் பாஜகவுக்கு பலன் கொடுக்குமா?
அது பாஜகவுக்கு பலன் கொடுக்காது. இன்னும் சொல்லப்போனால் பக்தர்களை பாஜக ஏமாற்றியிருக்கிறது. பக்தர்களின் நம்பிக்கை மற்றும் பழக்க வழங்கங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பேன் என பிரதமர் நரேந்திர மோடி திருவனந்தபுரத்தில் பேசினார். ஆனால் அதை அவர் செய்யவில்லை. பாஜக தலைமையிலான மத்திய அரசு பக்தர்களை முட்டாள் ஆக்கியுள்ளது.
பாஜக மாநிலத் தலைவர் சுரேந்திரன் 35 சீட் வென்றாலே ஆட்சியமைப்போம் என்கிறாரே?
மத்தியில் ஆட்சியில் இருக்கும் கட்சியின் மாநிலத் தலைவரிடம் இருந்து இப்படியான ஒரு பேச்சு, அறிக்கை வெளியாவது அதிர்ச்சியளிக்கிறது. அதே நேரம் காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க தொடர்ந்து சதி செய்பவர்கள் இப்படிச் சொல்வது ஆச்சர்யம் இல்லை. ஆனால் அது கேரளாவில் நடக்காது. அவர்கள் முயற்சியும் பலன் தராது.
கடந்த முறை நேமம் தொகுதியில் வென்று பாஜக கணக்கைத் தொடங்கியது. இந்த முறையும் நேமத்தில் பாஜக வெல்லுமா?
அது பாஜகவுக்கான வெற்றி அல்ல. ஓ.ராஜகோபாலுக்கு கிடைத்த வெற்றி. காங்கிரஸ் சார்பில் கே.முரளீதரன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதுமே அங்கு களம் மாறிவிட்டது. கே.முரளீதரன், அதே தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்த கருணாகரனின் மகன். கருணாகரன் அந்தத் தொகுதி மக்களோடு மிகவும் நெருக்கமாக இருந்தவர். ராஜகோபால் அனுதாப அலையால் வென்றவர். இந்தமுறை நேமத்தையும் பாஜக இழக்கும்.
தங்கக் கடத்தல் விவகாரத்தில் அமலாக்க இயக்குனரகத்தின் நடவடிக்கைக்கு எதிராக நீதி விசாரணை கோரும் கேரள அரசு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அது பாஜகவும், மார்க்சிஸ்ட் கட்சியும் நடத்தும் நாடகம். காங்கிரஸ்இல்லாத இந்தியா என்னும் கோஷத்தோடு, காங்கிரஸ் ஆளும் மாநிலங்களை சீர்குலைக்க பாஜக முயற்சிக்கிறது. இதனாலேயே காங்கிரஸ் முதல்வர் வரக்கூடாது என்பதற்காகவே பாஜகவின் தேசியத் தலைமை கடைசிநேரத்தில் சிலதொகுதிகளில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு வாக்களிக்க தனது பணியாளர்களைக் கேட்கும் எனவும் நான்சந்தேகம் கொள்கிறேன்.
பாஜகவுக்கு மார்கிஸ்ட் கட்சியுடன் கொள்கை முரண்பாடுகள் இருந்தாலும் எதிரிக்கு, எதிரி நண்பன் என்னும் கொள்கையைப் பின்பற்றும். கேரளாவில் காங்கிரஸ் அரசு வந்துவிட்டால் அது பீனிக்ஸ் பறவைபோல் மற்ற பகுதிகளிலும் காங்கிரஸை வீரியமாக்கும். மத்திய அரசின் கொள்கைகளை விமர்சிக்கும். இந்த சூழல் வர பாஜக விரும்பவில்லை. யு.டி.எப் இப்போது அனைத்து சமூகங்களின் ஆதரவையும் பெற்றுள்ளது. நிச்ச யம் ஆட்சியைப் பிடிப்போம்.
இவ்வாறு பேட்டியில் ஏ.கே.அந்தோணி கூறினார்.