‘‘வெளிப்படையாக சொல்ல  வேண்டிய அவசியமில்லை’’- சரத் பவாருடன் ரகசிய சந்திப்பு நடந்ததா? - அமித் ஷா பேட்டி

‘‘வெளிப்படையாக சொல்ல  வேண்டிய அவசியமில்லை’’- சரத் பவாருடன் ரகசிய சந்திப்பு நடந்ததா? - அமித் ஷா பேட்டி
Updated on
2 min read

சரத் பவாருடனான ரகசிய சந்திப்பு நடந்ததா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிதற்கு பதிலளித்த அமித் ஷா ‘‘அனைத்தையும் வெளிப்படையாக சொல்ல வேண்டிய அவசியமில்லை’’ என பதிலளித்தார்.

மும்பையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானியின் ஆன்டிலியா வீட்டுக்கு அருகே வெடிபொருட்கள் மற்றும் ஜெலட்டின் குச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அந்த காரின் உரிமையாளரான மான்சுக் ஹிரன், தானே பகுதியில் உள்ள நீர்நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

ஹிரன் மரண வழக்கை தீவிரவாத தடுப்புப் பிரிவும் வெடிபொருள் நிரப்பிய கார் நிறுத்தப்பட்ட வழக்கை என்ஐஏ-வும் விசாரித்து வருகின்றன. இதனிடையே, அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், ஹிரன் அந்தக் காரை நிறுத்திவிட்டு மற்றொரு காரில் தப்பிச் சென்றது தெரிந்தது. அந்த காரை சச்சின் வாஸ் பயன்படுத்தியதும் தெரியவந்தது.

இதையடுத்து, சச்சின் வாஸை என்ஐஏ அதிகாரிகள் கடந்த 13-ம் தேதி கைது செய்தனர். மேலும் காவலர் வினாயக் ஷிண்டே மற்றும் நரேஷ் தாரே ஆகிய இருவரும் ஹிரன் மரண வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், மும்பை காவல் ஆணையர் பரம் வீர் சிங் கடந்த 18-ம் தேதி ஊர்க்காவல் படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்தச் சூழ்நிலையில், பரம் வீர் சிங் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு ஒரு கடிதம் எழுதினார் அதில், “மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், உதவி காவல் ஆய்வாளர் சச்சின் வாஸ் உள்ளிட்ட காவலர்களிடம் மாதந்தோறும் ரூ.100 கோடி வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

குறிப்பாக மும்பையில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் பார்களில் ரூ.40 கோடி முதல் ரூ.50 கோடி வரை வசூலிக்குமாறு உத்தரவிட்டார். மேலும் முகேஷ் அம்பானிக்கு மிரட்டல் விடுக் கப்பட்ட விவகாரத்தில் என்னை பலிகடா ஆக்கிவிட்டார்கள்” என கூறியிருந்தார்.

இதையடுத்து, அமைச்சர் அனில் தேஷ்முக் உடனடியாக பதவி விலக வேண்டும் எனக்கோரி பாஜக வினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் மகாராஷ்டிர அரசுக்கும், அம்மாநில உள்துறை அமைச்சரான அனில் தேஷ் முக் சார்ந்துள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான பிரபுல் படேலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கெளதம் அதானியின் விருந்தினர் மாளிகையில் ரகசியமாக சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது. குஜராத்தை சேர்ந்த சில ஊடகங்கள் இந்த செய்தியை பெரிய அளவில் வெளியிட்டன.

இந்த சூழலில் டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது சரத் பவாருடனான ரகசிய சந்திப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமித் ஷா ‘‘அனைத்தையும் வெளிப்படையாக சொல்ல வேண்டிய அவசியமில்லை’’ என பதிலளித்தார். அதேசமயம் சந்திப்பு நடந்ததா, இல்லையா என்றும் கூறவில்லை. இதனால் பல்வேறு ஊகங்கள் எழுந்துள்ளன.

மகாராஷ்டிர அரசியலில் அனில் தேஷ்முக் விவகாரம் பெரும் அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில் சிவசேனாவின் அதிகாரபூர்வ பத்திரிக்கையான சாம்னாவும் அனில் தேஷ்முக்கை கடுமையாக விமர்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in