

அமலாக்கப் பிரிவு அதிகாரிகளுக்கு எதிராக கேரள அரசு நீதி விசாரணை நடத்த முடிவு செய்திருப்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. கூட்டாட்சி தத்துவத்துக்குச் சவால்விடும் செயல் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றம் சாட்டியுள்ளார்.
கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய தங்கம் கடத்தல் வழக்கில் முக்கியக் குற்றவாளி ஸ்வப்னா சுரேஷை மிரட்டி, முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக வாக்குமூலம் அளிக்க அமலாக்கப் பிரிவு கட்டாயப்படுத்தியதாக ஆடியோ ஒன்று கசிந்தது.
இதை அடிப்படையாக வைத்து கேரள போலீஸார், முதல்வர் ஆகியோர் மீது அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் திட்டமிட்டு அவதூறு பரப்ப முயன்றதாக வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் மீது வழக்குப் பதிவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி வி.ஜி.அருண் வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்டார். இதையடுத்து இந்த விவகாரத்தில் நீதி விசாரணைக்கு உத்தரவிடக் கேரள அமைச்சரவை நேற்று முன்தினம் முடிவு செய்து, தேர்தல் ஆணையத்தின் அனுமதிக்கு அனுப்பியுள்ளது.
கேரள சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று திருவனந்தபுரம் வந்தார்.
அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
''பொது சிவில் சிட்டம் என்பது அனைத்துச் சமூகத்தினரிடமும் கருத்துகளைக் கேட்டபின்புதான் நடைமுறைப்படுத்தப்படும். ஆனால், பொது சிவில் சட்டம் கொண்டுவருவதில் உறுதியாக இருக்கிறோம்.
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. விலையைக் குறைக்கக் கோரியும், வரிகளைக் குறைக்கக் கோரியும் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.
தங்கம் கடத்தல் வழக்கை விசாரித்து வரும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் மீது கேரள போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளார்கள். நீதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ள தகவலை அறிந்தேன். இது உண்மையில் மிகவும் துரதிர்ஷ்டமானது. கேரள அரசு இந்தச் செயல் மூலம் நாட்டின் கூட்டாட்சி தத்துவத்துக்குச் சவால் விடுகிறதா? கேரள அரசின் செயல் 100 சதவீதம் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.
கடந்த 70 ஆண்டுகளாக கேரள மாநிலம் காங்கிரஸ் தலையிலான யுடிஎஃப் மற்றும் இடதுசாரி தலைமையிலான எல்டிஎஃப் கட்சிகளுக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறது. இந்த மாநிலத்துக்குப் புதிய மாற்றுக் கட்சி தேவை. அதை பாஜக மட்டும்தான் வழங்க முடியும்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும், மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியும், தேர்தலில் நட்பு ரீதியாகப் போட்டியிடுகின்றன. இந்தத் தேர்தலில் யுடிஎஃப் அல்லது எல்டிஎஃப் வெல்லக்கூடும், ஆனால், மக்கள் தோற்கடிக்கப்படுவார்கள். கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சியும், காங்கிரஸும் எதிரியாக இருக்கிறார்கள். ஆனால், 2 ஆயிரம் கி.மீ. தொலைவில் நண்பர்களாக இருக்கிறார்கள்.
இரு கட்சிகளுமே போலியான வாக்குறுதிகளை வழங்கியுள்ளன. கேரள மக்களின் ஆசைகளைப் புரிந்துகொண்டு செயல்படவில்லை. கடந்த தேர்தலில் எல்டிஎஃப் அரசு அளித்த வாக்குறுதிகளில் எத்தனை வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது என்பது குறித்து அறிக்கையாகத் தர முடியுமா? சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்தும் அரசியல் செய்வதால்தான் மாநிலம் வளர்ச்சிப் பாதையில் பின்தங்கி இருக்கிறது''.
இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.